×

கனமழை எதிரொலி.. வரத்து குறைவால் தக்காளி விலை ‘கிடுகிடு’ உயர்வு: அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

சென்னை: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை தமிழ்நாட்டில் விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்யும் அதேவேளையில் இல்லத்தரசிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தக்காளி விலை ரூ.100-ஐ எட்டியுள்ளதே இதற்கு காரணம். கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரே வாரத்தில் தக்காளிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தை:
கர்நாடக, ஆந்திராவில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் 70 வாகனங்களில் தக்காளி வரும் நிலையில், கடந்த ஒரு வரமாக 40 வாகனங்களில் மட்டுமே தக்காளி வருவதாக கூறப்படுகிறது. மேலும், வட மாநிலங்களிலும் தக்காளி விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பதால் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வட மாநிலங்களுக்கும் தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி விலை ரூ.75க்கும், பெங்களூரு தக்காளி ரூ.80க்கும் விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனையாகிறது.

திருச்சி காந்தி சந்தை:
ஒசூர், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து திருச்சிக்கு தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. திருச்சி காந்தி சந்தையில் மொத்தவிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் கடந்த ரூ.40க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.90ஆக உயர்ந்துள்ளது. திருச்சியில் 25கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.1,550க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், வரத்து சீராகும் வரை தக்காளி விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30,000 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் 90% தக்காளி செடிகள் அழுகி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஏக்கருக்கு ரூ.1 லட்சம் செலவு செய்த போதும் மகசூல் போதிய அளவிற்கு இல்லை. மேலும், தொடர் மழையில் ஏக்கருக்கு 500 டன் தக்காளி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கிருஷ்ணகிரியில் 25 கிலோ கொண்ட ஒரு கிலோ தக்காளி பெட்டி ரூ.300-ரூ.500க்கு விற்பனையாகும்; தற்போது ரூ.1,700க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

The post கனமழை எதிரொலி.. வரத்து குறைவால் தக்காளி விலை ‘கிடுகிடு’ உயர்வு: அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Karnataka ,Tamil Nadu ,Bengaluru ,
× RELATED டெங்குவை தொற்று நோயாக அறிவித்த...