×

ஊருக்குள் வருவதால் பயிர்கள் சேதம்; வனவிலங்குகளை விரட்டும் பணிக்கு ரூ.20 லட்சத்தில் புதிய வாகனங்கள்: புலிகள் காப்பக அதிகாரி தகவல்


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் ஊருக்குள் வரும் வனவிலங்குகளை விரட்டவும், காயமடைந்த வனவிலங்குகளை சிகிச்சைக்கு கொண்டு செல்லவும், ரூ.20 லட்சத்தில் 2 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன என ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வனப்பகுதிகளில் காட்டுயானைகள் உள்ளிட்ட அரிய வகை விலங்கினங்கள் உள்ளன. இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்கு வரும் காட்டு யானைகளால் பயிர்ச்சேதம், உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. இவைகளை விரட்டவும், சாலைகளை கடக்கும்போது அடிபட்டு காயமடையும் வனவிலங்குகளை சிகிச்சைக்கு கொண்டு செல்லவும், நபார்டு 2023-24 திட்டத்தின் கீழ், தலா ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக 2 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களில் விலங்குகளை விரட்டக் கூடிய உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு வாகனத்தில் 4 பேர் கொண்ட குழு செல்லலாம். மனித-விலங்கு மோதல் நடைபெறும் பகுதிகளுக்குச் சென்று, யானைகளை வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்ப வனச்சரக அலுவலர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் விரைவாக செல்ல இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும். மேலும் வனப்பகுதியில் காட்டுத் தீ பரவும்போது, அங்கு துரிதமாகச் சென்று தீயை அணைக்கவும் இந்த வாகனங்களை பயன்படுத்தலாம். சாலையை கடக்கும் போது வாகனத்தில் அடிபடும் விலங்குகளை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லவும், நலமடைந்த விலங்குகளை மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு விடவும் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும்.

மேலும் இந்தக்குழுவினர் இரவு பகலாக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி சேதம் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மனித விலங்கு மோதல் நிகழ்வுகள் தொடர்பான நிவாரணங்களுக்கு பொதுமக்கள் வனச்சரக அலுவலர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஊருக்குள் வருவதால் பயிர்கள் சேதம்; வனவிலங்குகளை விரட்டும் பணிக்கு ரூ.20 லட்சத்தில் புதிய வாகனங்கள்: புலிகள் காப்பக அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiger reserve ,Srivilliputhur ,Deputy Director ,Meghamalai Tiger Reserve ,Devaraj ,Rajapalayam ,tiger ,Dinakaran ,
× RELATED புலிகள் காப்பக வனத்தை...