×

தோல் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி எச்சரிக்கை

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, ஓடையோரம் கொட்டப்பட்டிருந்த தோல் கழிவுகளை, தனியார் தோல் பதனிடும் ஆலைகள் தாமாக முன்வந்து அகற்றிக்கொண்டன. ஈரோடு மாநகராட்சி, சூளை பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் தோல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், அப்பகுதியில் உள்ள பிச்சைக்காரன் பள்ளம் ஓடையை ஒட்டி, கொட்டப்பட்டு வந்தது. இதன் காரணமாக, அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வந்ததுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, பிச்சைக்காரன் பள்ளத்தின் ஓரமாக கொட்டப்பட்டிருந்த கழிவுகளை அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அபராதம் விதிப்பதுடன், கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, பிச்சைக்காரன் பள்ளம் ஓடையை ஒட்டி, கொட்டப்பட்டிருந்த தோல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை, சம்பந்தப்பட்ட தோல் தொழிற்சாலையினர் நேற்று தாமாக முன்வந்து அகற்றிக்கொண்டனர்.

The post தோல் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Municipal Corporation ,Chulai ,Erode Corporation ,Dinakaran ,
× RELATED ஓடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றி...