×

கொடைக்கானல், சிறுமலையைத் தொடர்ந்து புதிய சுற்றுலாத்தலமாகிறது… புல்லாவெளி: தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு அறிவிப்பால் திண்டுக்கல் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

பட்டிவீரன்பட்டி: பெரும்பாறை அருகேயுள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியை சீரமைத்து சுற்றுலா தலமாக்கிட நிதி ஒதுக்கியதால் மலைக்கிராம மக்கள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாறை அருகே அமைந்துள்ளது புல்லாவெளி நீர்வீழ்ச்சி. பெரும்பாறை, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிசை, கல்லாங்கிணறு மற்றும் சுற்றியுள்ள மலைக்கிராமங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீரே இந்த நீர்வீழ்ச்சிக்கு நீராதாரமாகும். தற்போது தொடர் மழை காரணமாக புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகளவில் கொட்டி வருகிறது.

பசுமையும்… குளுமையும்…
பெரும்பாறை – தாண்டிக்குடி மலைச்சாலையில் மஞ்சள்பரப்பு என்ற இடத்திலிருந்து 300 அடி தூரத்தில் இந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், ஜில்லென்ற தட்பவெப்ப நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இப்பகுதியில் சாம்பல் நிற அணில், மான், காட்டுமாடு, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதனால் இந்த நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்காகவும், குளித்து மகிழ்வதற்காகவும் உள்ளூரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட சுற்றுலாப்பயணிகளும் அதிகளவில் வருகின்றனர்.

திகிலூட்டும் 300 அடி:
புல்லாவெளி அருவிக்கு செல்ல பாதை வசதி கிடையாது. கற்களால் ஆன குறுகலான பாதை உள்ளது. அதுவும் குண்டும், குழியுமாக தான் காட்சியளிக்கிறது. நீண்டதூரம் ஆறாக பயணித்து இங்கு தண்ணீர் பாய்வதால் நீர்வீழ்ச்சி விழும் பகுதி சுமார் 300 அடி பள்ளத்தாக்கு நிறைந்த ஆபத்தான பகுதியாகும்.

கொட்டும் நீரே குடிநீர்:
மழைக்காலங்களில் பல இடங்களில் பெருக்கெடுக்கும் ஊற்று தண்ணீர் குடகனாற்றில் பெருக்கெடுத்து புல்லாவெளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த தண்ணீர்தான் திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமான ஆத்தூர் காமராசர் நீர்த்தேக்கத்திற்கும் மற்றும் ஆத்தூர், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள கண்மாய்களுக்கும் செல்கிறது

அந்த கால தொங்கு பாலம்:
குடகனாறு அகலமாக தண்ணீர் செல்லும் ஆறாகும். விவசாயிகள், பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள், ஆற்றை கடப்பதற்காக ஆங்கிலேயர்கள் காலத்தில், இருகரைகளையும் இணைக்கும் வகையில் சுமார் 100 அடி உயரத்தில் இருபுறமும் இரும்பு ரோப்புகளுடன் கூடிய தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் வழியாக செல்லும் சுற்றுலாப்பயணிகள் இயற்கை அழகை ரசித்து கொண்டே செல்பி எடுத்து மகிழ்வர். இதில் நடந்து செல்வதே வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இதனால் சிறப்பு வாய்ந்த இந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சியை சீரமைத்து சுற்றுலாத் தலமாக மாற்றினால் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மலைவாழ் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அரசு அறிவிப்பால் மகிழ்ச்சி:
பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழக சட்டசபையில் கடந்த ஜூன் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் முடிந்ததும், சுற்றுலா- கலை மற்றும் பண்பாடு துறை சார்பிலான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புல்லாவெளி அருவி, கொட்டுவரை அருவி, கோட்டை நங்காஞ்சியாறு அணை பகுதி, மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள குட்லாடம்பட்டி அருவி, திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள புளியஞ்சோலை அருவி ஆகிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்’’ என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இப்பகுதி மலைக்கிராம மக்கள், சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விரைவில், அரசு சுற்றுலாத்துறை சார்பில் இதற்கான பணிகள் வேகமெடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

‘பாதுகாப்பான பாதை பாலம் மிக அவசியம்’
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ஹேமலதா மணிகண்டன் கூறுகையில், ‘‘இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த அருவியை சீரமைத்து சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மலைவாழ் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அரசின் அறிவிப்பு மலைவாழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த அருவி பகுதிக்கு செல்வதற்கும், குளிப்பதற்கும் பாதுகாப்பான பாதை வசதி அமைக்க வேண்டும். இந்த அருவிக்கு கீழே அடுத்தடுத்து 3 நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. இந்த நீர்வீழ்ச்சிகளை பார்க்க நவீன பாதுகாப்பான பாலங்கள் அமைக்க வேண்டும். இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வராத வண்ணம் நுழைவு வாயிலில் இதற்கான சிறப்பு கவுன்டர்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும்’’ என்கிறார்.

மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாக மாறும்’
மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா செல்வகுமார் கூறுகையில், ‘‘இந்த அருவியை சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்கதாகும். இதனால் இந்த பகுதி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும். பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். நிதி ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் மலைவாழ் மக்கள், விவசாயிகள், மணலூர் ஊராட்சி சார்பில் நன்றி. ஊராட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கருத்து கூறியுள்ளோம். அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான பார்க்கிங் வசதிகள் செய்ய வேண்டும். பெண்கள் உடை மாற்றுவதற்கும் அருவியின் கீழ்பகுதிக்கு சென்று வர அகலமான படிக்கட்டுகளுடன் பாதை வசதி அமைக்க வேண்டும். கடைகள் அமைப்பதற்கும் போதுமான இடங்கள் இருந்தால் கடைகள் வைப்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பயோ கழிப்பறைகள் அதிகளவில் நிறுவ வேண்டும்’’ என்றார்.

‘மினி குற்றாலமாகி விடும்’
பெரும்பாறையை சேர்ந்த மணிகண்டன் கூறுகையில், ‘‘புல்லாவெளி நீர்வீழ்ச்சியை சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்கதாகும். இதனால் இந்த பகுதி இனி திண்டுக்கல் மாவட்டத்தில் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும். பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். மேலும் இந்த இடம் மினி குற்றலாமாக மாறும். நிதி ஒதுக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள், விவசாயிகள் சார்பில் நன்றி’’ என்றார்.

The post கொடைக்கானல், சிறுமலையைத் தொடர்ந்து புதிய சுற்றுலாத்தலமாகிறது… புல்லாவெளி: தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு அறிவிப்பால் திண்டுக்கல் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Sirumalai ,Pullaveli ,Dindigul ,Tamil Nadu government ,Pattiveeranpatti ,Bullaveli Falls ,Perumparai ,Pullaveli Falls ,Dindigul District ,Yellowparappu ,Kanalkadu ,Tadiyankutisai ,Kallanginaru ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடியில்...