காளையார்கோவில்: காளையார்கோவில் பாண்டியன்கோட்டையில் தமிழி எழுத்து பொறித்த பானையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா தலைமையிலான ஆய்வாளர்கள், காளையார்கோவில் பாண்டியன்கோட்டை பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். ஆய்வில் தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் காளிராசா தெரிவித்ததாவது: திருக்கானப்பேர் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட காளையார்கோவிலில் சங்க கால கோட்டை இருந்த இடம் பாண்டியன்கோட்டை என்றழைக்கப்படுகிறது. இக்கோட்டையைச் சுற்றி அகழி, நடுவில் நீராவி குளம் உள்ளிட்டவை 37 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இக்கோட்டைப் பகுதியில் மேற்பரப்பை கள ஆய்வு செய்ததில் தொடர்ச்சியாக பழமையான பொருட்கள் கிடைத்து வருகின்றன.
வட்டச்சில்லுகள், மேற்கூரை ஓட்டு எச்சங்கள், சங்க கால செங்கல் எச்சங்கள், பானை ஓட்டுக்கீறல்கள், குறியீடுகள், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்து எழுதப்பட்ட பானையோடு, நெசவுக்கு பயன்படுத்தப்பட்ட எலும்பாலான முனையுடைய கருவிகள் ஆகியவை முன்பு கிடைத்துள்ளன. 2 ஆண்டுகளுக்கு முன் பாண்டியன்கோட்டையில் மோசிதபன் என்று எழுதப்பட்ட தமிழி எழுத்து பானை ஓடு மேற்பரப்பு கள ஆய்வில் கிடைத்தது. தற்போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்தில் ‘ன் கூட்டம்’ என்று எழுதப்பட்ட பானையோடு ஒன்று கிடைத்துள்ளது. ‘ன்’ என்பது தனி எழுத்தாகவும் அதனை அடுத்து இடைவெளியுடன் தொடர்ந்து கூட்டம் என்பது தொடர்ச்சியாகவும் வந்துள்ளது. தொல்லியல் அறிஞர்களின் மேலாய்வில் ‘ன் கூட்டம்’ அல்லது ‘ன் ஊட்டம்’ என வாசிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
பொதுவாக பானைகளில் இடமிருந்து வலமாக எழுத்துகள் எழுதப்படுவது வழக்கம். ஆனால், இப்பானை ஓட்டில் எழுத்துகள் கீழிருந்து மேலாகவோ, மேலிருந்து கீழாகவோ எழுதப்பட்டிருக்கிறது. பானை வனைந்த சக்கர அச்சுப்பதிவு எழுத்துக்கு நேர் மாறாக அமைந்துள்ளதால், இவ்வாறான முடிவுக்கு வர முடிகிறது. தொடர்ச்சியாக தமிழி எழுத்து பானை ஓடுகள் பாண்டியன்கோட்டை பகுதியில் கிடைக்கிறது. இப்பகுதி வரலாற்றுத் தொன்மை புதைந்த மேடாக உள்ளது. இவ்விடத்தில் தொல்லியல் துறை அகழாய்வு செய்தால் பழமையான வரலாறு வெளிப்படும். மேலும், தமிழி எழுத்து பொறித்த பானையோட்டின் மதிப்பு கருதி, பின்பு சிவகங்கை அரசு அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
The post காளையார்கோவில் பாண்டியன்கோட்டையில் தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுப்பு appeared first on Dinakaran.