×

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைக்க டெண்டர் வெளியீடு: ரூ.6 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் உருவாகிறது

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.6 கோடியில் அமைக்கப்படும் ஒலிம்பிக் அகாடமிக்கு வரைப்படம் மற்றும் டெண்டரை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் மொத்தம் 24 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இங்கு ஹாக்கிக்கு சர்வதேச அளவிலான அஸ்ட்ரோ டர்ப் மைதானம் மற்றும் பயிற்சி மைதானம் உள்ளன. இதுதவிர இறகுப்பந்து, டேபிள்டென்னிஸ் விளையாட்டுகளுக்கு உள்விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. கால்பந்து, டென்னிஸ், கபடி, மாற்றுத்திறனாளிகளுக்கு மைதானம் உள்ளன. இந்நிலையில் சர்வதேச தரத்தில் தடகளத்திற்கு சிந்தடிக் ஓடுதளம் உள்ளது. இதனை ரூ.8.10 கோடியில் புதுப்பிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அதற்காக ஓடுதளம் மூடப்பட்டு பழைய சிந்தடிக் டிராக்கில் ரப்பர், தார் உள்ளிட்டவை அகற்றப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ஒலிம்பிக் அகடாமியில் சர்வதேச நீச்சல் குளம், டைவிங் நீச்சல்குளம் மதுரையில் அமைக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அறிவித்திருந்தார். மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏற்கனவே உள்ள 28 மீட்டர் நீச்சல் குளத்தில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரை பதக்கங்களை வென்று வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் போது வைக்கப்பட்ட சர்வதேச நீச்சல் குளம் திட்டம் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2018ல் ரூ.6 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் திட்டமதிப்பீடு பெற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சர்வதேச நீச்சல்குள திட்டம் அனுப்பியும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் மதுரையில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்.

அதில் சர்வதேச நீச்சல் குளம், டைவிங் நீச்சல்குளம் அமைப்பதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தற்போது 3.3 அடி முதல் அடி ஆழத்தில் 25 மீட்டர் நீளத்திற்கு 8 டிராக் நீச்சல் குளம் உள்ளது. இதில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளச்செல்கின்றனர். அங்கு 50 மீட்டர் நீச்சல்குளமாக உள்ளது. அப்போட்டியின் போது 25 மீட்டர் நீச்சல்குளத்தில் பயிற்சி பெற்ற வீரர்களால் வினாடிகளில் வெற்றியை இழக்கின்றனர். தற்போதுள்ள 25 மீட்டர் நீச்சல் குளம் அருகிலேயே 50 மீட்டர்நீளம், 25 மீட்டர் அகலத்தில் 6 அடி ஆழத்திற்கு 10 டிராக் வரிசையில் சர்வதேச போட்டிகள் நடத்தும் வகையில் நீச்சல்குளம் அமைக்கப்படும். இத்துடன் உடைமாற்றும் அறை, கழிப்பறை, குடிநீர் வசதி, பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்படும்.

டைவிங்போர்டு நீச்சல்குளம் 25க்கு 20 மீட்டர் நீள அகலத்தில் 5 மீட்டர் ஆழத்தில் டைவிங் போர்டுடன் அமைக்கப்படும். இந்த நீச்சல் குளத்தில் டைமிங்போர்டும் அமைக்கப்பட இருக்கிறது. தற்போது வரை வீரர், வீராங்கனைகள் போட்டி ஆரம்பித்து வெற்றி எல்லையைத் தொடும் போது ஒவ்வொருவருக்கும் ஒருவர் வீதம் தனியாக நின்று அவர்கள் வெற்றி இலக்கை கடந்த நேரத்தை வினாடிகள் வரை தனியாக குறிப்பெடுத்துக்கொள்கின்றனர். டைபிங் போர்டு வந்து விட்டால் வீரர் குளத்தில் குதித்த வினாடியில் இருந்து வெற்றி இலக்கு எல்லையை தொடும் வரை துல்லியமாக வினாடிகளை கணக்கிட்டு டிஜிட்டல் போர்டில் அனைவரும் பார்க்கும்படி தெரிவித்துவிடும்.

இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா கூறுகையில், ஏற்கனவே அறிவித்த சிந்தடிக் ஓடுதளம் புதுப்பித்தலுக்கு ரூ.8.25 கோடியும் தற்போது அறிவித்த ரூ.6 கோடியிலான ஒலிம்பிக் அகாடமியும் ேசர்த்து மொத்தம் ரூ.14.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.6 கோடியில் அமைக்கப்படும் ஒலிம்பிக் அகாடமிக்கு வரைப்படம் மற்றும் டெண்டரை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்ட பின்னர் ஒலிம்பிக் அகாடமிக்கான கட்டுமான பணிகள் துவங்கப்படும் என்றார்.

The post மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைக்க டெண்டர் வெளியீடு: ரூ.6 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் உருவாகிறது appeared first on Dinakaran.

Tags : Olympic Academy ,Madurai Racecourse ,Madurai ,Public Works Department ,Madurai Racecourse Ground ,Dinakaran ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...