×

ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த இடத்தில் தேசிய பட்டியலின ஆணைய உறுப்பினர்கள் விசாரணை: போலீஸ் காவல் முடிந்து குற்றவாளிகள் 10 பேரும் மீண்டும் சிறையில் அடைப்பு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி இரவு 11 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூர் சரித்திர பதிவேடு ரவுடி திருவேங்கடம், வழக்கறிஞர் அருள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்குவதற்காக அவரது தம்பி பொன்னை பாலு மற்றும் 10 பேர் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தநிலையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக ரவுடி திருவேங்கடம் போலீசாரிடம் தெரிவித்ததன்பேரில் அவரை மாதவரம் ஆட்டுச்சந்தை பகுதி அருகே போலீசார் அழைத்துச் சென்றபோது தப்பி ஓடி அவர் என்கவுன்டரால் சுடப்பட்டு இறந்தார்.
இந்நிலையில், தேசிய பட்டியலின ஆணைய உறுப்பினர் வட பள்ளி ராம்சந்தர், தனி செயலாளர் கார்த்தி, இயக்குனர்கள் ரவிவர்மன், ஜாகர் நாத் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்ட பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில், நேற்று நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

முன்னதாக அவர்கள் அயனாவரம் பகுதியில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு சென்று அங்கு அவரது மனைவி பொற்கொடியிடம் நடந்த சம்பவங்கள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர். இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிகள் 11 பேரை கடந்த 11ம் தேதி செம்பியம் போலீசார் காவலில் எடுத்து பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் இதர 10 பேரை நேற்று செம்பியம் போலீசார் பூந்தமல்லி சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பூந்தமல்லி சிறைச்சாலைக்கே நீதிபதி தயாளன் நேரில் வந்து விசாரித்து அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஏற்கனவே அவர்களுக்கு வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் உள்ளதால் பூந்தமல்லி சிறைக்கு 10 பேரும் அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த இடத்தில் தேசிய பட்டியலின ஆணைய உறுப்பினர்கள் விசாரணை: போலீஸ் காவல் முடிந்து குற்றவாளிகள் 10 பேரும் மீண்டும் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : National Registering Commission ,Armstrong ,Chennai ,Bahujan Samaj Party ,president ,Ponnai Balu ,Arkadu Suresh ,Kunradur ,Thiruvenkadam ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி...