×

மூணாறு அருகே மரம், மண் சரிந்து போக்குவரத்து பாதிப்பு

மூணாறு: மூணாறு அடுத்த பெரியவாரை எஸ்டேட் அருகே, சாலையில் மரம் சாய்ந்து, மண் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும். இயற்கை எழில் நிறைந்த தேயிலை தோட்டங்கள், மலைப்பகுதிகள், புல்வெளிகள், இயற்கையாக மலரும் பூக்கள், விதவிதமான பறவைகள், அரிய வனவிலங்குகள் என இயற்கையின் வரப்பிரசாதமாக திகழும் மூணாறை கண்டுகளிக்க கேரள மக்கள் மட்டுமல்லாமல், வெளிமாநில மக்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் மாட்டுப்பட்டி டேம், தேசிய வனவிலங்கு பூங்கா ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்நிலையில், கேரளாவில் மழை கொட்டி வருவதால், மூணாறு பகுதியில் சாலையோரங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில், நேற்று மாலை பெய்த கனமழையால் மூணாறு-மறையூர் மாநில நெடுஞ்சாலையில், பெரியவாரை எஸ்டேட் அருகே, சாலையில் மரம் சாய்ந்தும், மண் சரிந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த மூணாறு தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கனமழை பெய்து வருவதால், இரவு நேரங்களில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பயணத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

The post மூணாறு அருகே மரம், மண் சரிந்து போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Munnar ,Periyawarai Estate ,Idukki district ,Kerala ,Dinakaran ,
× RELATED மூணாறில் காரை சேதப்படுத்திய காட்டுயானைகள்: பொதுமக்கள் பீதி