×
Saravana Stores

நீலகிரியில் கனமழை பெய்து வருவதால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்


நீலகிரி: நீலகிரியில் கனமழை பெய்து வருவதால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர். தொடர் கனமழையால் ஆறுகள், ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடலூர், பந்தலூர், தேவாலா, நாடுகாணி, சேரம்பாடி, தொரப்பள்ளி, முதுமலை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான இடங்களில் வீடுகளை மழை நீர் சூழந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கன மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டால் சமாளிக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முறிந்து விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவலாஞ்சி சுற்றுலா மையம் இன்றும் நாளையும் மூடப்பட்டுள்ளது.

நீலகிரியில் கனமழை பெய்து வருவதால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தொடர் கனமழையால் ஆறுகள், ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்றும் அவசர காலங்களில் தேவையான பொருட்களை பத்திரமாக எடுத்து வைக்கவும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் இன்று 21-செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பிருப்பதகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post நீலகிரியில் கனமழை பெய்து வருவதால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Koodalur ,Bhandalur ,Devala ,Nadukani ,Seramadi ,Dorapalli ,Mudumalai ,Nilagiri ,Dinakaran ,
× RELATED பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல்...