- புத்தகம் திருவிழா
- கோயம்புத்தூர்
- கோவை மாவட்ட சிறுதொழில் சங்கம்
- கொடிசியா
- கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா
- கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம்
- அவினாசி சாலை…
- தின மலர்
கோவை: கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் ‘கொடிசியா’ மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை புத்தகத் திருவிழா ஜூலை 19-ம் தேதி முதல் ஜூலை 28-ம் தேதி வரை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடக்கிறது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது: தமிழ்நாடு அரசு, நூலகத்துறை மற்றும் கொடிசியா புத்தகத் திருவிழா கமிட்டி இணைந்து இந்த புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெற்றது. சிறைச் சாலைகளுக்கு 2,000 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்த ஆண்டும் அரசு விடுதிகள், மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு உதவும் வகையில் ‘புக் டொனேஷன் ட்ரைவ்’ நடைபெற உள்ளது. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், வாசிப்பை அதிகரிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் புத்தகத் திருவிழாவின் போது, தினமும் நம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை மேற்கோள்ளப்படும். தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த புத்தகத் திருவிழா அமைக்கப்படும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் அனைத்து விதமான புத்தகங்களும் இடம்பெறும் என்று இவ்வாறு அவர் கூறினார்.
புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில், காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அனுமதி இலவசம். இந்த ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், அசாம், சத்தீஸ்கர் மற்றும் புதுடெல்லி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பதிப்பாளர்கள் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.
மேலும் 280-க்கும் மேற்பட்ட அரங்குகளில் லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. கூடுதல் சிறப்பம்சமாக, புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளும், கலைஞர்களும் கலந்து கொள்ளும் கலை, இலக்கிய நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற உள்ளன. மேலும் இளம் படைப்பாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.
The post கோவையில் ஜூலை 19-ம் தேதி புத்தக திருவிழா தொடக்கம்: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.