×

மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை யுனிட்டு 20 காசு முதல் 55 காசு வரை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த மின்கட்டண உயர்வு ஜூலை முதல் தேதியில் இருந்து அமலாக்கப்படும் என அறிவித்துள்ளது. இத்துடன், ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால், கடந்த ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட மாதம் தோறும் நிலைக் கட்டணம் வசூலிக்கும் முறை இப்போதும் தொடர்வது சரியல்ல. இது மாற்றப்படாமல் நிலைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக மின் நுகர்வு என்பது தவிர்க்க முடியாத தேவையாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தினக் கூலித் தொழிலாளர்கள், அடித்தட்டு மாத ஊதியப் பிரிவினர், அமைப்பு சாரா உடல் உழைப்புத் தொழிலாளர்களை மின் கட்டண உயர்வு கடுமையாகப் பாதிக்கும் என்பதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்துடன் ஒன்றிய அரசு 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்துள்ள மின்சார திருத்தச் சட்ட மசோதா பரிசீலனையில் இருக்கும் நிலையில், அதன் நோக்கத்தை நிர்வாக உத்தரவுகள் மூலம் நிறைவேற்ற முயற்சித்து வருகிறது. அதன்படி ஆண்டு தோறும் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. அதற்கு இசைவாக ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு வருகிறது. மானிய சலுகைகள் கொண்ட மின்கட்டணம் நிர்ணயிக்கும் மாநில அரசின் உரிமை பறிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. சமூக வளர்ச்சிக்கு மின்சார உற்பத்தியும், விநியோகமும் அரசின் கையில் இருப்பது அத்தியாவசியமாகும் என்பதை கருத்தில் கொண்டு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ள மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து, நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு மாதம் தோறும் வசூலிக்கப்படும் முறையை முற்றிலுமாக ரத்து செய்து, கட்டணத்தை வெகுவாகக் குறைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

 

The post மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Electricity Regulatory Commission ,Mutharasan ,Chennai ,Communist Party of India ,Tamil Nadu ,State Secretary ,Tamil ,Nadu ,
× RELATED மின்வாரியத்துக்கு ரூ.519 கோடி ஒதுக்க ஆணையம் அறிவுறுத்தல்