×

உயர்கல்வித் துறை சார்பில் ரூ.52.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.07.2024) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கோயம்புத்தூர் அரசு மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் 52 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக்கான புதிய கட்டடங்கள், வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல். அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள். தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து. வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி கனவினை நனவாக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயில தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்திய “புதுமைப் பெண்” திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

“புதுமைப் பெண்” திட்டம் தொடங்கப்பட்ட செப்டம்பர் 5, 2022 முதல் தற்போது வரை 2.73 இலட்சம் மாணவியர்கள் இதன்மூலம் மாதா மாதம் ரூ.1000/- பெற்று பயனடைந்து வருகின்றனர். குடும்ப சூழ்நிலை மற்றும் வேறு பல காரணங்களுக்காகவும் படிப்பை இடை நிறுத்திய மாணவியர் பலரும், இப்புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மீண்டும் உயர்கல்வியை தொடர்ந்து பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் கல்லூரிகளில் சேரும் மாணவியரின் எண்ணிக்கை 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்கல்வித் துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தல்:

தற்காலிக கட்டடங்களில் இயங்கி வந்த புதுக்கோட்டை மாவட்டம். ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 12 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவிலும், திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 12 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 14 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கல்லூரிக்கான புதிய கட்டடங்கள்;

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 8 ஆய்வகக் கட்டடங்கள்: கோயம்புத்தூர், அரசு மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 9 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 15 வகுப்பறைகள் மற்றும் 10 ஆய்வகக் கட்டடங்கள்: என மொத்தம் 52 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உயர்கல்வித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தொழில் நுட்பக்கல்வி ஆணையர் வீரராகவராவ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post உயர்கல்வித் துறை சார்பில் ரூ.52.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Tamil Nadu ,M.K. Stalin ,Higher Education Department ,Government Arts and Science Colleges ,Pudukottai ,Tiruchirappalli ,Namakkal ,Coimbatore Government Women's Polytechnic College ,M.K.Stalin ,
× RELATED அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: முதல்வர் மு.க.ஸ்டாலின்