ஆனைமலை: பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் தேங்காய்கள், உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட விலை நிர்ணயித்து அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடை மழைக்கு பிறகு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை என அடுத்தடுத்து தொடர்ந்து பெய்ததால் தேங்காய் உற்பத்தி அதிகமானதுடன், மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட தேங்காய்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.
கடந்த 2023ம் ஆண்டு தேங்காய் உற்பத்தி அதிகரிப்பால் ஒரு கிலோ தேங்காய் ரூ.18வரை சரிந்தது. தேங்காய் விலை மிகவும் வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்க பெறாமல் தவித்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், ஆனைலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டுவந்த உரித்த தேங்காய் கொள்முதல் நடைபெற்றது. இந்நிலையில், மட்டையுடன் கூடிய தேங்காயும் கொள்முதல் செய்ய அரசு முன் வரவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மட்டையுடன் கூடிய முழு தேங்காய் கொள்முதல் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் முதன் முறையாக கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று மட்டையுடன் கூடிய தேங்காய் கொள்முதல் துவங்கப்பட்டது.
இதில் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் இருந்து விவசாயிகள் 4850மட்டையுடன் கூடிய தேங்காய் கொண்டு வந்திருந்தனர். அவைகள் ஒரு பகுதியில் குவித்து போடப்பட்டது. அவை தரம் பிரித்து மறைமுக ஏலம் விடப்பட்டது. இதில், ஒரு தேங்காய் ரூ.10.50 முதல் அதிகபட்சமாக ரூ.11.50வரை என சராசரியாக ஒரு தேங்காய் ரூ.11க்கு ஏலம்போனது. விவசாயிகள் கொண்டுவந்த 4850 மட்டை தேங்காய் மொத்தம் ரூ.53,350க்கு விற்பனையானது.
இதனை, 5 வியாபாரிகள் வாங்கி சென்றனர். ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் கொள்முதல் ஒவ்வொரு வாரம் திங்கள் கிழமையன்று நடைபெறும் எனவும் விவசாயிகள் எத்தனை மூட்டை மட்டையுடன் கூடிய தேங்காய் கொண்டு வந்தாலும் அதனை பிரித்து தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்து ஏலம் விடப்படும் என ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர் செந்தில்முருகன் தெரிவித்தார்.
The post ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டையுடன் தேங்காய் கொள்முதல் துவக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.