பழநி: பழநி பகுதியில் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை தென்னை மரங்கள், மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரத்திற்குட்பட்ட மலையோர கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளா காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட பழநி அருகே கோம்பைபட்டி பகுதியில் சேகர், துரைச்சாமி என்பவரது தோட்டங்களுக்குள் புகுந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் மற்றும் தென்னை மரங்களை நாசம் செய்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் ஒற்றை யானையை காட்டிற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒற்றை யானை நடமாட்டத்தால் வனச்சரக எல்லையோர கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கவும் பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் வனத்துறையினருடன், வேட்டை தடுப்பு காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினர்.
The post பழநி பகுதியில் தென்னை மரங்களை துவம்சம் செய்த யானை: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.