வாலாஜா: வாலாஜாவில் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது, முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து தீயணைப்பு துறையினர் தத்ரூபமாக செயல்விளக்கம் அளித்தனர். ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு சார்பில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்பது குறித்து செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சி வாலாஜாவில் பூண்டி மகான் ஆசிரமம் அருகே உள்ள குளத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை வாலாஜா நகராட்சி தலைவர் ஹரிணி தில்லை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையில் குழுவின் 10 வீரர்கள் கலந்து கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது, நீரில் மூழ்கியவர்கள், தீயில் அகப்பட்டவர்கள், பேரிடர் காலங்களில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது ஆகியன குறித்து தத்ரூபமாக செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் ரப்பர் படகு, கயிறு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி ஒத்திகை நடந்தது. இதில் தாசில்தார் அருட்செல்வம், வாலாஜா நகராட்சி ஆணையாளர் பழனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? appeared first on Dinakaran.