×

நீண்ட நேர காத்திருப்பை தவிர்க்க ஆசிரியர் கவுன்சலிங்கில் புதிய நடைமுறை: பதற்றமின்றி பங்கேற்கும் ஆசிரியர்கள்


தியாகராஜநகர்: பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க தினமும் ஒரு பாடத்துக்கு மாநில அளவில் 300 ஆசிரியர்கள் மட்டும் அழைக்கப்பட்டு இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதனால் ஆசிரியர்கள் பதற்றமின்றி கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு சீனியாரிட்டி அடிப்படையில் இணையதளம் மூலம் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பொறுத்தவரை சில பாடங்களுக்கு மாநில அளவில் 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

குறிப்பாக நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சொந்த ஊர்களில் பணியாற்ற வேண்டும் என்ற ஆவலில் தொலை தூர மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்று வருகின்றனர்.கடந்த ஆண்டுகளில் விடிய விடிய கலந்தாய்வு நடைபெற்றதால் ஆசிரிய, ஆசிரியைகள் காத்திருப்பை தவிர்ப்பதற்காக நடப்பு ஆண்டில் ஒரு பாடத்திற்கு மாநில அளவில் 300 ஆசிரியர்கள் என 5 பாடத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வவு நடத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு அந்தந்த பாடத்தின் ஆசிரியர்கள் மட்டும் அழைக்கப்பட்டு கலந்தாய்வில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக ஆசிரியர்கள் கூட்ட நெரிசல் இன்றி நிதானமாக பங்கேற்கின்றனர். நெல்லையில் நேற்று சாராள் தக்கர் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதற்கு அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். இதேபோல் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வு நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு விருப்பம் தெரிவித்து 6 தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். கலந்தாய்வு முதன்மை கல்வி அலுவலர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது.

The post நீண்ட நேர காத்திருப்பை தவிர்க்க ஆசிரியர் கவுன்சலிங்கில் புதிய நடைமுறை: பதற்றமின்றி பங்கேற்கும் ஆசிரியர்கள் appeared first on Dinakaran.

Tags : Thyagarajanagar ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே...