×

விருப்ப மனுவுக்கு ஆளே இல்லாததால் நொந்து போன மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாங்கனி மாவட்டத்துல ‘லேது’ என்று சிம்பாலிக்காக மாஜி தமிழக விவிஐபி எதுக்கு சொன்னாருன்னு தொண்டர்கள் மண்டையை பீய்த்து கொள்கிறார்களாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி  மாநகருல இலைக்கட்சி சார்பாக நேத்திக்கு ஆர்ப்பாட்டம் நடந்துச்சு.  கூட்டம் பிரமாண்டமாக இருக்கணும். எந்த பக்கம் திரும்பினாலும் கட்சிக் கொடி  பறக்கணுமுன்னு தமிழக மாஜி விவிஐபி உத்தரவு போட்டுட்டாராம். இதனால, 10 ஆண்டுகளாக அரசு பணத்தை சுருட்டிய நிர்வாகிகள் களத்துல குதிச்சிட்டாங்களாம். விவிஐபியை சந்தோஷப்படுத்த ஆர்ப்பாட்டம் நடந்த இடமெல்லாம் கொடிய பறக்க  விட்டிருக்காங்க. மாவட்டம் முழுவதிலுமிருந்து ஆட்களை சரக்கு வண்டியில  ஏத்திக்கிட்டு வந்தாங்க. ஆனா நபருக்கு வெறும் ரூ.150தான் கொடுத்தாங்களாம். பிரச்னையே இங்கேதான் துவங்குவதாக இலை கட்சியினர் பேசிக்கிறாங்க. தலைக்கு 500 கிடைக்கும்னு வந்தோம். குறைவாக கிடைக்குதே என்று அரசல் புரசலாக பேசிக் கொண்டது விவிஐபி காதுல விழுந்ததாம். இதனால இந்த  கூட்டத்துல பேசிய மாஜி, பலமுறை ‘லேது லேது’ என்று தெலுங்கு மொழியில பேசினாராம். அர்த்தம் தெரியாத ரத்தத்தின் ரத்தங்கள் முழிச்சிக்  கிட்டிருந்தாங்களாம். பக்கத்துல இருந்த நிர்வாகி ஒருத்தரு.. தலைக்கு தற்போது இவ்வளவு கொடுக்க முடியும். மாநகராட்சி தேர்தல் நடந்து முடிந்ததும் அள்ளித் தருவாங்க.. இப்போது கிள்ளி கொடுத்ததை வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை தான், தலைவர் லேது.. லேது என்று சொன்னதாக பேசிக் கொள்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘கூட்டணியை காரணம் காட்டி மாஜி அமைச்சரை தெறிக்கவிட்ட இலை கட்சி நிர்வாகிகள்… அதற்கு சொன்ன காரணத்தை கேட்டு டென்ஷன் ஆனதாக சொல்றாங்களே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் பல அரசியல் கட்சி நிர்வாகிகள் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். ஆனால், மனுநீதி சோழன் மாவட்டத்தில் இலை கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு குறைந்த அளவிலான நிர்வாகிகளே விருப்ப மனு அளித்துள்ளார்களாம். மனுக்களின் எண்ணிக்கையை எண்ணி பார்த்த மாஜி அமைச்சர் அதிர்ச்சியில் மூழ்கிபோனாராம். அதே அதிர்ச்சி விலகாமல் நேரடியாக களத்தில் இறங்கி ஒவ்வொருவருக்கும் போன்போட்டு ஏன் விருப்ப மனு தாக்கல் செய்யல என்று விசாரித்தாராம். இதற்கு நிர்வாகிகளின் ஒரே குரலில் கோரஸாக அளித்த பதிலால் மாஜி அமைச்சர் ஆடிப்போனராம். அதாவது இலை கட்சி நிர்வாகிகள் மாஜி அமைச்சரிடம் கூறியது, ‘‘கூட்டணியில் இருந்த மாம்பழ சின்னங்காரங்க வேற விலகி போயிட்டாங்க. அவங்க கூட்டணியில இருந்தா ஓட்டு பிரியாம நாம ஜெயிக்கலாம். இப்போது நாம தனி மரமாக நிற்கிறோம். எப்படி தேர்தலில் போட்டியிடுவது. மாங்கனி போனதா இலை ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான். பின்னர் ஏங்க போட்டியிட வேண்டும் என மாஜி அமைச்சரிடம் நிர்வாகிகள் கறாராக தெரிவித்தார்களாம். நம்பல நம்பி, நம் தோளில் ஏறி சவாரி செய்தவர்கள் மாங்கனி கட்சியினர். இப்போது நீங்கள் பேசுவதை பார்த்தால் நாம அவங்க மேலே சவாரி செய்யணும்னு நினைக்கிறீங்களா… அது ஒரு காலமும் நடக்காது என்று உறுமினாராம். 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த கட்சிக்கு விருப்ப மனு அளிக்க கூட கட்சியில் தொண்டர்கள் இல்லையா என மாஜி அமைச்சர் அப்செட்டில் இருந்தாராம். அதை பார்த்த தொண்டர்கள், இப்போதுதான் எங்களை உங்கள் கண்களுக்கு தெரிகிறதா. பத்தாண்டில் நீங்கள் மட்டுமே பதுக்கிக் கொண்டீர்கள். அதில் கொஞ்சமாவது தொண்டர்களுக்கு கொடுத்திருந்தால் இந்த நிலைமை ஏன் வரப்போகுது என்று இலை கட்சியினர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘குளறுபடியில் முடிந்த இலை கட்சியினர் ஆர்ப்பாட்டம் பற்றி சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘குமரி மாவட்ட இலை கட்சி சார்பில் கிழக்கு, மேற்கு மாவட்டங்களுக்கு தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடந்தால் கூட்டத்தை காட்ட முடியாது. எனவே ஒருங்கிணைந்து, நாகர்கோவிலில் கலெக்டர் ஆபீஸ் முன்னாடியே ஆர்ப்பாட்டம் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடுகள் நடந்தன. சாதாரண கட்சி நடத்தினாலே அரை மணி நேரம், ஒரு மணி நேரம் வரைக்கும் ஆர்ப்பாட்டம் நடக்கும். எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டம் என்பதால் எவ்வளவு நேரம் நடத்த போறாங்களோ என்று போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். நிர்வாகிகள் பேசுவதை வீடியோ பதிவு செய்வதுடன், குறிப்பெடுக்கவும் உளவுத்துறையினர் தயார் நிலையில் இருக்க, காலை 10.40க்கு தொடங்கிய ஆர்ப்பாட்டம் 10 நிமிடத்தில் முடிந்து, முக்கிய நிர்வாகிகள் காரில் ஏறி சென்று விட்டனர். ஏன், அவசர, அவசரமாக ஆர்ப்பாட்டத்தை முடிக்கிறாங்கனு தெரியாமல் தொண்டர்கள் மட்டுமல்ல, காவல்துறையும் குழம்பி போச்சாம். கடைசியில் ஆர்ப்பாட்டத்துக்கு மொத்தமே 100 பேர் கூட வர வில்லை. வந்தவங்களும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே முண்டியடித்து நின்றனர். மைக்கில் கத்து, கத்து என கத்தியும் யாரும் கேட்க வில்லை. தொண்டை வலி வந்தது தான் மிச்சம். இதனால் அப்செட் மூடுக்கு போன மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தை 10 நிமிடத்தில் முடிச்சுட்டு, நிர்வாகிகள் காரில் பறந்துட்டாங்களாம். உட்கட்சி பூசல், கரன்சி சப்ளை இல்லை என்ற காரணங்களால் பலரும் ஆர்ப்பாட்டத்துக்கு வருவதை புறக்கணித்துவிட்டார்களாம். அப்புறம், பேருக்கு நாலு கோஷம் போட்டால் போதுமா.. ஆர்ப்பாட்டம் என்றால் முறையாக அறிவிக்கணும். நிர்வாகிகள் கூட்டம் போடனும். எதுவும் இல்லாமல் ஆர்ப்பாட்டத்துக்கு வா என்றால் எப்படி வருவாங்க என்றும் புலம்பியவாறு வந்திருந்த நிர்வாகிகள் சென்றனர்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post விருப்ப மனுவுக்கு ஆளே இல்லாததால் நொந்து போன மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : minister ,wiki ,VVIP ,Tamil Nadu ,Lethu ,Mangani district ,Apdia ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...