×

ஆடி மாத அம்மன் கோயில்களுக்கான முதற்கட்ட ஆன்மிக பயணம் 19ம் தேதி தொடங்குகிறது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் ஆடி மாத அம்மன் கோயில்களுக்கான முதல்கட்ட ஆன்மிகப் பயணம் வரும் 19ம் தேதி தொடங்குகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடங்களாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி மாதத்தில் 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மண்டலங்களில் வரும் 17ம் தேதிக்குள் வழங்கிடும் பொருட்டு, மூத்த குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர், கற்பகாம்பாள் கோயில், பாரிமுனை காளிகாம்பாள் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும், திருச்சி மண்டலத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோயில்,

உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், சமயபுரம் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும், மதுரை மண்டலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயில், அழகர்கோவில், ராக்காயியம்மன் கோயில், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும்,

கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயமுத்தூர் கோனியம்மன் கோயில், பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், சூலக்கல் சூலக்கல் மாரியம்மன் கோயில், கோயமுத்தூர் தண்டுமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும், தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோயில் வராகியம்மன் கோயில், தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில், புன்னைநல்லூர், மகா மாரியம்மன் கோயில், திருக்கருகாவூர் கர்ப்பக ரட்சாம்பிகை கோயில், பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும்,

திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், முப்பந்தல், இசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் ஒன்னுவிட்ட நங்கையம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குழித்துறை சாமுண்டியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும் முதியோர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். ஆடி மாத அம்மன் கோயில் முதற்கட்ட ஆன்மிகப் பயணமானது மேற்கண்ட 6 மண்டலங்களில் வரும் 19ம் தேதி தொடங்குகிறது.

இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் உணவு, பயணவழிப் பை மற்றும் அந்தந்த கோயில்களின் பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களுக்கு உதவியாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் செல்கின்றனர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

The post ஆடி மாத அம்மன் கோயில்களுக்கான முதற்கட்ட ஆன்மிக பயணம் 19ம் தேதி தொடங்குகிறது: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Adi Mata Amman ,Minister ,Shekharbabu ,Chennai ,Aadi Mata Amman ,Department of Hindu Religious Charities ,
× RELATED கார் ரேஸ் நடந்தபோது போக்குவரத்து இடையூறு இல்லை: அமைச்சர் சேகர்பாபு