×

ஆம்ஸ்ட்ராங் கொலையில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் உடல் மூலக்கொத்தளம் மயானத்தில் தகனம்: காவலில் உள்ள மற்ற 10 பேரிடம் போலீசார் தொடர் விசாரணை

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி திருவேங்கடம் நேற்று முன்தினம் அதிகாலை, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும்போது போலீசாரை கள்ளத் துப்பாக்கியால் சுட முயன்றதால் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.
இந்த என்கவுன்டர் சம்பவத்தில் திருவேங்கடம் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மாதவரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் தீபா மற்றும் அவரது குழுவினர், என்கவுன்டர் சம்பவம் நடந்த வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் நேரில் விசாரித்தனர்.

இதையடுத்து திருவேங்கடம் உடல் வைக்கப்பட்டிருந்த ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் வந்து திருவேங்கடத்தின் அப்பா கண்ணன், அக்கா முனியம்மாள், அக்கா மகன் குமாரிடமும் நீதிமன்ற நடுவர் தீபா விசாரித்தார். பின்பு திருவேங்கடத்தின் உறவினர்களான 3 பேரையும் சவக்கிடங்கிற்கு அழைத்துச் சென்று அடையாளம் காட்டும் பணியை மேற்கொண்டார். பின்னர் திருவேங்கடத்தின் உடல் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் செய்யப்பட்டு முறையான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இரவு 12 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை மருத்துவர்கள் பிரியதர்ஷினி, நாராயணன், ராஜேஷ் அடங்கிய மருத்துவக் குழுவினரால் திருவேங்கடத்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாலையில் திருவேங்கடத்தின் உடல், அவரது தந்தை கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, மூலக்கொத்தளத்தில் உள்ள மயானத்திற்கு திருவேங்கடத்தின் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு எரியூட்டப்பட்டது.

இதனால் ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் மூலக்கொத்தளம் மயான பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், போலீஸ் காவலில் உள்ள மற்ற 10 பேரிடமும் செம்பியம் காவல்நிலையம் மற்றும் தனிப்படை போலீசார் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலையில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் உடல் மூலக்கொத்தளம் மயானத்தில் தகனம்: காவலில் உள்ள மற்ற 10 பேரிடம் போலீசார் தொடர் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thiruvenkatam ,Armstrong ,Moolakotthalam ,CHENNAI ,Rowdy Thiruvenkadam ,Bahujan Samaj Party ,president ,Thiruvenkadam ,Moolakothalam ,Dinakaran ,
× RELATED நெல்லை வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதம்