×

‘சண்டாளர்’ என்கிற சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை: சண்டாளர் என்கிற சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: இந்தியாவின் சாதியக் கட்டமைப்பில் ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டள்ளன. இப்பெயர்கள் சமூக மதிப்பையும் அவமதிப்பையும் சுட்டுவதாக இருக்கின்றன. தங்களுடைய சாதியின் பெயர் இழிவாக இருப்பதாகக் கருதுகிற சாதிகள் அப்பெயரை மாற்றிக் கொள்வதும், அதற்கு அரசு ஒப்புதல் கொடுத்து அரசாணை வெளியிடுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன.

மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படையான பொருட்களை உற்பத்தி செய்தல், பிணங்களை அடக்கும் செய்தல் போன்ற சமூகப் பயனுள்ள பணிகளை செய்கின்ற சமூகக் குழுக்களை இழிவான பெயர்களில் அழைப்பதும், அரசியல் மேடைகளில் பிறரை வசைபாடுவதற்குப் பயன்படுத்துவதும், கலை இலக்கியங்களிலும், திரைப்பட நகைச் சுவைக் காட்சிகளிலும், திரைப்பட பாடல்களிலும் அப் பெயர்களைப் பயன்படுத்துவதும் பரவலாக இருக்கின்றன.

இது அப்பெயர்களிலுள்ள மக்களையும் அவர்களைப் போன்ற மக்களையும் புண்படுத்தும் செயலாகும். தவிர இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றச்செயல் என்ற எண்ணமும் பொதுச் சமூகத்தில் இல்லை. பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989ன்படி, பொதுவெளியில் பட்டியல் சாதி பெயர்களை இழிவான பொருளில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் இந்தியாவிலும் சண்டாளர் என்ற பெயரில் மக்கள் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் அட்டவணையில் இப்பெயர் 48ம் இடத்தில் உள்ளது என்பதையும் இவ்வாணையம் சுட்டிக்காட்டுகிறது.  அண்மைக் காலங்களில் பிறரை இழிவுப்படுத்தும் நோக்கில் இப்பெயர் பொதுவெளியில் சமூக ஊடகங்களில் அழுத்தமாகப் பேசப்படுவதைக் காண முடிகிறது. எனவே இழிவுப்படுத்தும் நோக்கித்திலோ, நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ சண்டாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்துகிறது.

மேலும், அவ்வாறு பயன்படுத்துவோர் மீது பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989ன் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரசுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரைக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ‘சண்டாளர்’ என்கிற சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : State Commission for Adi Dravida and Tribals ,CHENNAI ,India ,Adi Dravidar and Tribal State Commission ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் விளையாட்டு தலைநகரம்...