சென்னை: உடல் நலக் குறைவால் 2016 செப்டம்பர் 22ம் தேதி இரவு 10.25 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு காலமானார். இந்த காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்களில் நிறைய முரண்பாடுஇருப்பதால் உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் ராம்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அதில், காய்ச்சல் மற்றும் நீரிழப்புக்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, குணமடைந்து வருவதாகவும் இட்லி போன்ற உணவுசாப்பிட்டதாகவும் விரைவில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்லப் போவதாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்து டிசம்பர் 5ம் தேதி இறந்துவிட்டதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டது. நிர்ப்பந்தங்கள் காரணமாக, ஜெயலலிதா உடல்நிலை குறித்து பொய் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டதாக கூறப்பட்டது.
செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட காலகட்டத்தில் ஜெயலலிதா, காவிரி நதி நீர் பங்கீடு சம்பந்தமாக அதிகாரிகளுடன் கலந்துரையாடல் செய்ததாகவும், அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தியதாகவும் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா கவனித்து வந்த துறைகளை ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து, ஜெயலலிதா கையெழுத்திட்ட பரிந்துரை கடிதம் வெளியிடப்படவில்லை. தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற தேர்தல் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது, தேர்தல் படிவங்களில் மயக்க நிலையில் இருந்த ஜெயலலிதாவின் கைரேகையை வாங்க வேண்டும் என்ற முடிவு எடுத்தவர் யார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 7 மணிக்கே யார் சொல்லி அதிமுக அலுவலகத்தில் புது முதல்வரை தேர்வு செய்ய கூடினார்கள் என தெரிவிக்கவில்லை. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீபாவை மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்தது ஏன் என தெரியவில்லை. ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் 7 ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த போதும், அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன் அவரது உடலை எம்பாமிங் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
The post ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.