×

அமலாக்கத்துறை வழக்கில் கைதை எதிர்த்து ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: வெளி நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடத்தியதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர். இதுதொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜாபர் சாதிக் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்நிலையில், டெல்லி திகார் சிறையில் இருந்து ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அதிகாரிகள் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, ஜாபர் சாதிக்கை காவலில் விசாரிக்க கோரி அமலாக்கத்துறை சார்பில் மனு செய்யப்பட்டது. அதற்கு ஜாபர் சாதிக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதையடுத்து இந்த மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.

The post அமலாக்கத்துறை வழக்கில் கைதை எதிர்த்து ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Zafar Sadiq ,Enforcement ,Chennai ,Jafar Sadiq ,Central Narcotics Trafficking Unit ,Department ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத பண பரிமாற்றம் ஜாபர்...