×

புதுவையில் 6 பேரிடம் ₹52.20 லட்சம் மோசடி

புதுச்சேரி, ஜூலை 16: பங்கு சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியதை நம்பி புதுவையில் 6 பேர் ரூ.52.20 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பிரியங்கா என்பவருக்கு வாட்ஸ் அபில் மர்ம நபர் தொடர்பு கொண்டு பங்குசந்தையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார். இதைநம்பி பிரியங்கா ரூ.27 லட்சத்தை முதலீடு செய்து,
மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். இதேபோல் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் ரூ.4.95 லட்சம் மற்றும் கோனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த ரவி சர்மா என்பவர் ரூ.1.30 லட்சத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். மேலும் புதுச்சேரி காலாப்பேட் பகுதியை சேர்ந்த பிதுபூசன் தாஸ் என்பவரை மர்ம நபர் தொடர்புகொண்டு தொலைதொடர்பு துறை அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார்.

அப்போது தங்கள் மீது துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் தங்களது ஆதார் மற்றும் தொலைபேசி எண் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்க பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதைநம்பி பிதுபூசன் தாஸ் மர்ம நபருக்கு ரூ.14 லட்சம் அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். குருமாம்பேட்டை பகுதியை சேர்ந்த உதித் ராஜ் சிங் என்பவரை மர்ம கும்பல் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தே அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளனர். இதை நம்பி உதித் ரூ.1.32 லட்சத்தை முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்துள்ளார். பின்னர் சம்பாதித்த பணத்தை எடுக்க முடியாததால், மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.

நெல்லித்ேதாப்பு பகுதியை சேர்ந்த ராகுல் கிருஷ்ணன் கூகுளில் சுற்றுலா குறித்து தேடியுள்ளார். அப்போது மர்ம நபர் ராகுலை தொடர்பு கொண்டு பம்பர் பரிசு விழுந்து இருப்பதாகவும், இந்த பரிசு மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து விடுதிகளிலும் 3 இரவு, 4 பகல் தங்குவது இலவசம், இப்பரிசை பெற ரூ.47 ஆயிரம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதைநம்பி ராகுலும் பணத்தை அனுப்பியுள்ளார். அப்போது கூடுதல் சலுகைகளை பெற பணம் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கு ராகுல் வங்கி விவரங்களை பதிவு செய்தபோது, அவருக்கு தெரியாமல் 2 முறை ரூ.58 ஆயிரம் அவரது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மர்ம நபர் ஒருவர் நேரில் வந்து ராகுலிடம் ட்ரிப் குறித்து பணம் கேட்டுள்ளார். அதை நம்பி ராகுலும் ரூ.2 லட்சத்தை கொடுத்துள்ளார். மொத்தமாக ரூ.3.63 லட்சத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.52.20 லட்சத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுவையில் 6 பேரிடம் ₹52.20 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Priyanka ,Muthialpet ,Dinakaran ,
× RELATED புதுவையில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது