×
Saravana Stores

உயர் அதிகாரி பெயரை கூறி பொருட்கள் வாங்கி மோசடி குமரியில் மாஜி போலீஸ்காரர் அதிரடி கைது போலி அடையாள அட்டைகள் பறிமுதல்

குளச்சல், ஜூலை 16: குமரியில் காவல்துறையில் பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ்காரர் போலி அடையாள அட்டைகளை காண்பித்து பொருட்கள் வாங்கி மிரட்டி வந்த தகவலின் பேரில், கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து காவல்துறையில் பணியாற்றி வருவது போல் இருந்த போலி அடையாள அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குமரி மாவட்டம் மண்டைக்காடு அடுத்த சேரமங்கலம் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சேகர் (54). இவர் காவல்துறையில் பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்டவர். இந்த நிலையில் சேகர் போலி அடையாள அட்டைகளை காண்பித்து, காவல்துறை உயர் அதிகாரி பெயரை கூறி பொருட்கள் வாங்கி மிரட்டி வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் நேற்று முன் தினம் காலை சேகரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அவரது வீட்டில் காவல்துறையில் பணியாற்றுவது போல் அச்சிடப்பட்டு இருந்த போலி அடையாள அட்டைகள் இருந்தன. எஸ்.ஐ. சீருடையில் ஒரு புகைப்படம், தமிழ்நாடு ரயில்வே போலீசில் பணியாற்றுவது போல் மாற்று பெயருடன் கூடிய ஒரு அடையாள அட்டை மற்றும் தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றுவது போல் 2 அடையாள அட்டைகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பி.என்.எஸ். சட்டப்பிரிவு 336 (11), 339 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், சேகர் காவல்துறையில் 1993ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நிரந்தர ஓய்வு கொடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் தொடர்ந்து காவல்துறையில் பணியாற்றி வருவது போல் போலி அடையாள அட்டைகளை காண்பித்து, உயர் அதிகாரி பெயரை கூறி பொருட்கள் வாங்கி ஏமாற்றி வந்ததாக கிடைத்த தகவலின் பேரில் வீட்டை சோதனை செய்ததில், போலி அடையாள அட்டைகள் கிடைத்துள்ளன. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றனர். சேகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் உடல்நிலை சரியில்லை என கூறியதால் டாக்டர் அட்மிட் என எழுதினார். இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post உயர் அதிகாரி பெயரை கூறி பொருட்கள் வாங்கி மோசடி குமரியில் மாஜி போலீஸ்காரர் அதிரடி கைது போலி அடையாள அட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Kulachal ,Dinakaran ,
× RELATED வேலூரில் மாநில அளவிலான போட்டி குமரி...