×

மறைமலையடிகளாரின் 148வது பிறந்த நாள் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மலர் வணக்க மரியாதை: தமிழ் வளர்ச்சித்துறை தகவல்

சென்னை: தமிழகப் புலவர் பெருமக்களுள் மறைத்திரு மறைமலையடிகளார், தனித்தமிழ்த் தந்தையாக மட்டுமின்றித் தனித்திறம் படைத்த பல்கலைப் பேரறிஞராக விளங்கினார். தமிழர்கள் அனைவரும் தூயதமிழ் பேச வேண்டும் என்ற நோக்கில் ‘தனித்தமிழ் இயக்கம்’ தொடங்கித் தமிழுக்காக செழும் பணியாற்றியவர். சைவத் திருப்பணியும் சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்த செம்மல். ‘தமிழ்க்கடல்’, ‘தனித்தமிழின் தந்தை’ என்றெல்லாம் போற்றப்பட்ட மறைமலையடிகள் 1876ம் ஆண்டு 15ம் நாள் நாகைப்பட்டினத்தில் பிறந்தவர்.

பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆகிய நூல்களுக்கு ஆராய்ச்சியுரை எழுதியும், திருவொற்றியூர் முருகன் மும்மணிக்கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் முதலிய செய்யுள் நூல்களையும், சிந்தனைக் கட்டுரைகள், அறிவுரைக் கொத்து, சிறுவர்களுக்கான செந்தமிழ், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் போன்ற கட்டுரை நூல்களையும், குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி, கோகிலாம்பாள் கடிதங்கள் முதலிய புதினங்களையும் எழுதியவர்.

அன்னாரது 148வது பிறந்தநாளினை முன்னிட்டு அவரைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், பல்லவபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு இன்று காலை 10.30 மணிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், தாம்பரம் மாநகராட்சி மேயர், தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் ஆகியோரால் மலர் வணக்கம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

The post மறைமலையடிகளாரின் 148வது பிறந்த நாள் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மலர் வணக்க மரியாதை: தமிழ் வளர்ச்சித்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Mahamalaiyadikar ,Tamil Nadu government ,Tamil Development Department ,CHENNAI ,Tamil Nadu ,Kiraamalaiyadi ,Tanitha Tamil Movement ,Saivath Tirupanim ,Tamilnadu government ,Dinakaran ,
× RELATED நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின்...