×

விவசாய நிலங்கள், நெடுஞ்சாலையில் விடிய விடிய யானை அட்டகாசம்: போக்குவரத்து நிறுத்தம் மின்சாரம் துண்டிப்பு

ஆம்பூர்: ஆம்பூர் அருகே ஒற்றை யானை விடிய விடிய அட்டகாசம் செய்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மற்றும் ஆம்பூர் வன சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை தந்தத்துடன் கூடிய டஸ்கர் யானை சுற்றி திரிந்து வருகிறது. ஆம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள மலைகிராமங்களான நாயக்கனேரி, பனங்காட்டேரி, காமனூர்தட்டு ஆகிய பகுதிகளுக்கு ஆண்டிற்கு ஒருமுறை இந்த யானை வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாம். கடந்த ஆண்டு வந்த நிலையில் தற்போது இந்த யானை மீண்டும் ஆம்பூர் வன சரகத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பனங்காட்டேரி மலைக்கிராமத்திற்கு செல்லும் வழியில் இந்த யானை முகாமிட்டு இருந்தது. பின்னர், வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர்.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இந்த யானை சாணாங்குப்பம் காப்புக்காட்டையொட்டியுள்ள வனப்பகுதிக்குள் திரிந்தது. பின்னர், மாதனூர் அடுத்த உடையராஜபாளையம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களுக்குள் நுழைந்தது. முன்னாள் அமைச்சரான பாண்டுரங்கன் நிலத்திற்கு வந்த யானை, அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலையை அருகே வந்தது. இதை கண்ட அப்பகுதியினர் பட்டாசு வெடித்தும், தீபந்தங்களை காட்டியும் யானையை காட்டுபகுதிக்கு விரட்ட முயன்றனர். மேலும் இதுபற்றி ஆம்பூர் வனச்சரக அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே யானை நள்ளிரவு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. இதனால் வாகனங்கள் மோதி யானைக்கு பாதிப்பு ஏற்படும் என கருதிய வனத்துறையினர் மற்றும் போலீசார் போக்குவரத்தை நிறுத்தி வைத்தனர். உடையராஜபாளையத்தை கடந்த அந்த யானை வெங்கிளி மற்றும் ஜமீன் இடையே சாலையை கடந்து விவசாய நிலங்களுக்குள் சென்றது. பின்னர் அந்த யானை, பாலாறு பகுதி அருகே வந்து நின்றது.

வழிதவறி வந்ததை உணர்ந்த நிலையில் அந்த யானை மீண்டும் வந்த வழியே திரும்பி தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. இதனால் இன்று அதிகாலை மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் யானை சாலையை கடந்து செல்ல ஏதுவாக உடையராஜபாளையம், தோட்டாளம், குளிதிகை ஜமீன், வெங்கிளி, கீழ்முருங்கை ஆகிய இடங்களில் மின்சப்ளை துண்டிக்கபட்டது. சுமார் 11 மணியளவில் சாலைக்கு வந்த யானை 7 கி.மீ. தூரம் நடந்து சென்று, இன்று அதிகாலை கீழ்முருங்கையை சேர்ந்த சிவசங்கரன் என்பவரது செங்கல் சூளைக்குள் நுழைந்தது. பின்னர் அப்பகுதியில் இருந்த மாந்தோப்பில் புகுந்து மரக்கிளைகளை முறித்தும், சப்போட்டா பழங்களையும் தின்றது. தொடர்ந்து அப்பகுதியில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்தும், உடல் மீது பீய்ச்சி அடித்து கொண்டது. பின்னர் அங்கிருந்து வெளியேறி அப்பகுதியில் உள்ள சாமிநாதன் என்பவரது நிலத்தில் முகாமிட்டுள்ளது.

வனத்துறையினர், போலீசார் அங்கிருந்து யானையை காட்டுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விடிய விடிய யானை அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் தூக்கத்தை இழந்து பீதியடைந்தனர்.

The post விவசாய நிலங்கள், நெடுஞ்சாலையில் விடிய விடிய யானை அட்டகாசம்: போக்குவரத்து நிறுத்தம் மின்சாரம் துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : AMBUR ,Tirupathur district ,Alangayam ,Ampur ,
× RELATED வாணியம்பாடி காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!!