×

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு; ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்டோர் கண்டனம்

பென்சில்வேனியாவில் பரப்புரை செய்து கொண்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது. காதில் காயமடைந்த ட்ரம்ப் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் ஒபாமா ஆகியோர் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றது சிறப்பு பாதுகாப்புப் படை; காதில் காயம் ஏற்படவே பாதுகாப்பு படையினரால் பத்திரமாக டிரம்பை மீட்டுச்செல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது.

இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளார். பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்.

இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் கூடியிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் டிரம்ப்பை சுற்றி பாதுகாப்பு அரணாக மாறினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, துப்பாக்கி சூடு நடத்திய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டொனால்டு டிரம்ப்க்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டொனால்டு டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமலா ஹாரிஸ் தனது X தள பதிவில் கூறியதாவது; பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து எனக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் டிரம்ப்க்கு பலத்த காயம் ஏற்படவில்லை என்பதை அறிந்து நானும் எனது கணவர் டக்கும் நிம்மதியடைந்தோம். அவருக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும், இந்த அர்த்தமற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். யுனைடெட் ஸ்டேட்ஸ் ரகசிய சேவை, உடனடியாக பதிலளித்தவர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் உடனடி நடவடிக்கைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

இது போன்ற வன்முறைகளுக்கு நம் நாட்டில் இடமில்லை. இந்த வெறுக்கத்தக்க செயலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும், இது மேலும் வன்முறைக்கு வழிவகுக்காமல் இருக்க நமது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பராக் ஒபாமா வெளியிட்டுள்ள பதிவில்; நமது ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு முற்றிலும் இடமில்லை. என்ன நடந்தது என்று எங்களுக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றாலும், முன்னாள் அதிபர் டிரம்ப் பெரிய அளவில் காயமடையவில்லை என்பதில் நாம் அனைவரும் நிம்மதியடையலாம், மேலும் நமது அரசியலில் நாகரீகம் மற்றும் மரியாதைக்கு நம்மை மீண்டும் ஒப்புக்கொள்ள இந்த தருணத்தைப் பயன்படுத்த வேண்டும்.

டிரம்ப் விரைவில் குணமடைய நானும் மிட்செல்லும் வாழ்த்துகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள X தள பதிவில் கூறியதாவது; டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது கவலை தருகிறது. அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. டிரம்ப் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார். பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு; ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்டோர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : US ,Donald Trump ,Joe Biden ,Modi ,Pennsylvania ,Trump ,President ,President Donald Trump ,
× RELATED எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவி – டிரம்ப் அறிவிப்பு