மதுரை, ஜூலை 14: மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து மே 2019ல் ஓய்வு பெற்றவர் சம்பத். அவருக்கு மார்ச் 2017ல் கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டபோது, ஒர்க்கிங் பிரிவிலிருந்து மாறுபவர்களுக்கு வழங்கப்படுவது போல் அல்லாமல் குறைவான ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து சம்பத், உயர் நீதிமன்ற கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரருக்கு முறையான ஊதிய உயர்வு வழங்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அப்போது போக்குவரத்து கழகம் தரப்பில் ‘‘ஊதிய ஒப்பந்தத்திற்கு உட்பட்டு வரும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு வழங்க ஒரு நபர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையிலும், மனுதாரர் செப். 2016 ஊதிய ஒப்பந்தத்திற்கு பின்பு பதவி உயர்வு பெற்றதாலும் அவருக்கு வழங்கிய ஊதிய உயர்வு முறையானது’’ என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஒர்க்கிங் பிரிவிலிருந்து கண்காணிப்பாளர் பிரிவிற்கு மாறுபவர்களுக்கான ஊதிய நிர்ணயம் தொடர்பாக அரசாணைகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. செப். 2016 ஊதிய உயர்வு பலன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் செப். 2017ல் தான் வழங்கப்பட்டுள்ளது. மனுதாரர் அதற்கு கண்காணிப்பாளர் பிரிவிற்கு வந்துள்ளார். எனவே தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தனி நீதிபதி உத்தரவின் பேரில் மனுதாரருக்கு நான்கு வாரத்தில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
The post ஊதிய உயர்வு வழங்குவதற்கு எதிரான அரசு போக்குவரத்துக் கழகத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி appeared first on Dinakaran.