×

கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை பாயும் புதிய மதுவிலக்கு திருத்தச்சட்டம் அமலுக்கு வந்தது: தண்டனை விவரங்களை பட்டியலிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: புதிய தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்டத்தின்படி கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தண்டனை விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு எச்சரித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த மாதம் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளை தொடர்ந்து, இனி கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் முதலிய குற்றச் செயல்களை முற்றிலும் ஒழிப்பதற்காக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட உத்தரவிட்டிருந்தேன். அதன் ஒரு பகுதியாக, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில், ஏற்கெனவே நடைமுறையிலுள்ள 1937ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரும் வகையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் புதிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படுமென அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 29-6-2024 அன்று, தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அச்சட்ட மசோதாவிற்கு ஆளுநர் அவர்களால் கடந்த 11ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டு, அது தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத் திருத்தத்தின் விவரங்கள் பின்வருமாறு: 1937ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் கீழ், 1 பிரிவு4(1) (aaa) – (1) 100 லிட்டருக்கு மேல் சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல், பிரிவு 4(1)(b) – (2) சட்டவிரோதமான மதுபானம் தயாரித்தல், பிரிவு 4(1)(f) – (3) சட்டவிரோதமான மதுபான ஆலை அல்லது மதுபான நொதி வடிப்பாலையினை கட்டுதல், பிரிவு 4(1)(h) – (4) விற்பனைக்கான சட்டவிரோதமான மதுபானங்களை குப்பியில் அடைத்தல் ஆகியவற்றிற்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் வரையிலான அபராதம் என தற்போது விதிக்கப்பட்டு வரும் தண்டனை, திருத்தப்பட்ட சட்டத்தின்படி, மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகளுக்கு குறைவில்லாத கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
2 பிரிவு-4(1)(aa) – 50 லிட்டருக்கு மேல் 100 லிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல் குற்றத்திற்கு அதிகபட்சமாக 6 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது 2,000 ரூபாய் வரையிலான அபராதம் என தற்போது விதிக்கப்பட்டு வரும் தண்டனை திருத்தப்பட்ட சட்டத்தின்படி, பிரிவு 4(1)(b)ன்படி, இரண்டு ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

3 பிரிவு 4(1)ன் கீழ் 50 லிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல்; (2) சட்ட விரோதமான மதுபானம் அருந்துதல் மற்றும் வாங்குதல்; (3) மேற்கண்ட குற்றங்கள் புரிவதற்குப் பணம் செலவழித்தல்; (4) உரிமம் இல்லாத இடங்களில் மது அருந்த அனுமதித்தல் ஆகிய குற்றங்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது 1000 ரூபாய் வரையிலான அபராதம் என இதுவரை விதிக்கப்பட்டு வந்த தண்டனை, இனி திருத்தப்பட்ட சட்டத்தில், பிரிவு 4(1)(c)ன்படி, ஓராண்டுக்கு குறையாத 3 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும். 4 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு வகை மதுபானம், வெளிநாட்டு மதுபானம், நொதிபானம் மற்றும் நொதித்த பழரச மதுவகை போன்ற அறிவிக்கப்பட்ட மதுபானங்களின் போக்குவரத்து, வைத்திருத்தல் மற்றும் அருந்துதல் தொடர்பான குற்றங்களுக்கு சட்டவிரோதமான மதுபானம் வைத்திருத்தல், அருந்துதல் மற்றும் போக்குவரத்து, ஆகியவற்றுக்கு பொருந்தக்கூடிய அபராதம் விதிக்கப்பட்டு வந்த தண்டனை, இனி திருத்தப்பட்ட சட்டத்தில், பிரிவு 4(1)(நீ)-ன் வரம்புரையின்படி, 1 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
5 பிரிவு-4 (1-A)(I)ன்படி மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு, இதுவரை ஆயுட்காலத்திற்கு கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் 5,000 ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்பட்டு வந்ததற்கு பதிலாக, இனி ஆயுட்காலத்திற்குக் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் குறையாத அபராதம் விதிக்கப்படும். 6 பிரிவு 4(1-A)(II)ன்படி மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தாத பிற கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு, இதுவரை விதிக்கப்பட்டு வந்த 10 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் வரையிலான அபராதம், இனி 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான அபராதம் என விதிக்கப்படும்.

7 பிரிவு 5ன்படி, மனிதர்கள் அருந்துவதற்கு ஏற்றத்தக்க வகையில் இயல்பு மாற்றப்பட்ட சாராவியை மாற்றினால் அல்லது மாற்ற முயற்சி செய்தால், அதற்கு இதுவரை 3 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரையிலான அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனி 3 முதல் 7 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும். 8 பிரிவு 5ஏ-யின்படி, மது அருந்துவதற்கு உரிமம் இல்லாத இடங்களைப் பயன்படுத்தும் குற்றத்திற்கு புதிய பிரிவாக, அந்தக் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இடம் வேறு எவரும் பயன்படுத்தாமல் தடுப்பதற்காகப் பூட்டப்பட்டு, சீல் வைக்கப்படும். 9 பிரிவு 6ன்படி, மதுபானம் தொடர்பான விளம்பரங்களை செய்தல் குற்றத்திற்கு, 6 மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது 1000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டு வந்தது. இனிமேல், திருத்தப்பட்ட சட்டத்தின்படி, இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ஒரு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும். 10 பிரிவு 7ன்படி, கூட்டுச்சதி குற்றத்திற்கு, 4ம் பிரிவின் கீழ் பெருங்குற்றங்களுக்காக மூன்று ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான அபராதம் மற்றும் 4ம் பிரிவின் கீழ் சிறிய குற்றங்களுக்கு 3 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது ரூ.1000 வரையிலான அபராதம் ஆகியவை விதிக்கப்பட்டு வந்தன. இனி, திருத்தப்பட்ட சட்டத்தின்படி, 4ம் பிரிவின் கீழ் குற்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட அதே தண்டனை மற்றும் சட்டத்தின் வகைமுறைகளை தவிர்க்க அல்லது பயனிழக்க செய்ய சதி செய்ததற்காக ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் ஐம்பது ஆயிரம் ரூபாய் முதல் ரூ.1 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

11 பிரிவு 11ன் கீழ், இச்சட்டத்தில் வேறு வகையில் வகைசெய்யப்படாத குற்றங்களுக்கு இதுவரை 6 மாதங்கள் வரை சிறைதண்டனை அல்லது 500 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் என விதிக்கப்பட்டு வந்த தண்டனை, இனி ஒராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 50,000 ரூபாய் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் என விதிக்கப்படும். 12 பிரிவு 24-Dயின்படி, குற்றச்செயல்களை இணக்கமாக தீர்த்துக் கொள்வதற்கான அதிகாரம் 10,000 ரூபாய்க்கு மேற்படாமல் ஆனால், ரூ.1000க்கு குறையாமல் பெருங்குற்றங்களை தவிர இதர குற்றச்செயல்களை இணக்கமாகத் தீர்த்துக் கொள்வதற்கு கூட்டுக்கட்டணம் விதிக்கப்பட்டது. புதிய திருத்தச் சட்டத்தின்படி, 25,000 ரூபாய்க்கு மேற்படாமல் ஆனால், ரூ.1000க்குக் குறையாமல் பெருங்குற்றங்களை தவிர இதர குற்றச்செயல்களை இணக்கமாக தீர்த்துக் கொள்வதற்கு கூட்டுக்கட்டணம் விதிக்கப்படும். இதுதவிர, மேற்கூறிய குற்றங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து அசையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும்.

கள்ளச்சாராயம் தொடர்பான மோசமான குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களிடம் இருந்து அவர்களது நன்னடத்தைக்கான பிணையப் பத்திரத்தை பெற இச்சட்டத்தின் கீழ் நிர்வாக நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய சட்டத்தின் கீழ் மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டு, ஏற்கெனவே தண்டிக்கப்பட்ட ஒரு நபர் மீண்டும் தண்டிக்கப்படும்போது, அந்த நபரின் சிறைவாசம் முடிந்த பின்பு, அவரது தற்போதைய வசிப்பிடப் பகுதியில் இருந்து அவர் வெளியேறி வேறொரு மாவட்டத்திற்கு அல்லது வேறொரு பகுதிக்கு சென்று வசித்திட உத்தரவு பிறப்பிக்குமாறு மதுவிலக்கு அலுவலர்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க இத்திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள், பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சட்டத் திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞரின் சம்மதமின்றி பிணை வழங்க இயலாத வகையில் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை பாயும் புதிய மதுவிலக்கு திருத்தச்சட்டம் அமலுக்கு வந்தது: தண்டனை விவரங்களை பட்டியலிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Kallakurichi district ,Dinakaran ,
× RELATED அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: முதல்வர் மு.க.ஸ்டாலின்