×

தேர்தல் நடக்க உள்ள சூழலில் காஷ்மீர் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்கள்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள சூழலில், அம்மாநில துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி ஒன்றிய உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள், காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது. இதற்காக, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில் சில புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, காவல்துறை, பொது ஒழுங்கு, அகில இந்திய பணியாளர்கள் தொடர்புடைய விஷயங்களில் ஆளுநரின் ஒப்புதலை பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அட்வகேட் ஜெனரல் நியமனம், சட்ட அதிகாரிகள் நியமனம், வழக்கு தொடர அனுமதி வழங்குவது அல்லது மறுப்பது அல்லது மேல்முறையீடு செய்வது தொடர்பான அரசின் நடவடிக்கைகளுக்கு ஆளுநரின் ஒப்புதல் அவசியமாக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள், வழக்கு விசாரணை இயக்குநரகம் மற்றும் தடய அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களும் துணைநிலை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என புதிய விதியில் கூறப்பட்டுள்ளது.

 

The post தேர்தல் நடக்க உள்ள சூழலில் காஷ்மீர் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்கள்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Home Ministry ,New Delhi ,Union Home Ministry ,Lt. ,Governor ,Jammu ,Ministry of Home Affairs ,Dinakaran ,
× RELATED மோடியின் புதிய காஷ்மீர் கனவு...