×
Saravana Stores

ஸ்திரமற்ற நிலையில் இருக்கும் பாஜக கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது: மம்தா பானர்ஜி கணிப்பு

மும்பை: ‘ஒன்றியத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஸ்திரமற்ற நிலையில் உள்ளது; அந்த அரசு நீண்ட காலம் நிலைக்காது’ என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் வசிக்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒன்றியத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஸ்திரமற்ற நிலையில் உள்ளது. இந்த அரசு நீண்ட காலம் நிலைக்காது.

நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட ஜூன் 25ம் தேதி அரசமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நாங்கள் அவசரநிலை பிரகடனத்தை ஆதரிக்கவில்லை. அதேநேரம், பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் அவசரநிலையுடன் தொடர்புடைய தருணங்களே பெரும்பாலும் எதிரொலித்தன. மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து யாருடனும் ஆலோசிக்கப்படவில்லை. ஏராளமான எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நேரத்தில், அந்த சட்டங்கள் அவை யில் நிறைவேற்றப்பட்டன’ என்றார்.

தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரை தெற்கு மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மம்தா சந்தித்துப் பேசினார்.அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மகராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி 30 தொகுதிகளைக் கைப்பற்றியது. மகாராஷ்டிரா சட்டப் பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து தலைவர்கள் ஆலோசித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

The post ஸ்திரமற்ற நிலையில் இருக்கும் பாஜக கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது: மம்தா பானர்ஜி கணிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP coalition government ,Mamta Banerjee ,MUMBAI ,BJA-LED NATIONAL DEMOCRATIC COALITION GOVERNMENT ,SAID WESTERN CHIEF ,Sivasena ,Mumbai Bandra ,Maharashtra ,
× RELATED மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி...