×

திருமணமான 5 மாதத்தில் கணவர் வீர மரணம் அடைந்ததால் ‘கீர்த்தி சக்ரா’ விருதுடன் தாய் வீட்டுக்கு சென்ற மருமகள்: பணப்பலன்கள் ஏதும் கிடைக்காமல் தவிக்கும் பெற்றோர்

புதுடெல்லி: ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த அன்ஷுமான் சிங்குக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட நிலையில், அந்த விருதுடன் அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் பணப்பலன்கள் ஏதும் கிடைக்காமல் பெற்றோர் தவித்து வருகின்றனர். திருமணமான இரண்டு மாதத்தில், குடும்பத்தை விட்டுவிட்டு சியாச்சின் மலைப்பகுதிக்குச் சென்று ராணுவ முகாமில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வந்த கேப்டன் அன்ஷுமன் சிங், கடந்த ஆண்டு ஜூலை மாதம் வீர மரணம் அடைந்துவிட்டார். அதாவது திருமணமான 5 மாதத்தில் அவர் இறந்தார். அதனால் அன்ஷுமான் சிங் மனைவி ஸ்மிருதி சிங் இளம் விதவையானார். இந்திய ராணுவத்தினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் இரண்டாவதாக இருக்கும் கீர்த்தி சக்ரா விருது கடந்த 5ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்பட்டது.

இவ்விருதினை அன்ஷுமான் சிங் மனைவி ஸ்மிருதியும், தாயார் மஞ்சு சிங்கும் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் தனது மகன் அன்ஷுமன் சிங்கிற்கு வழங்கப்பட்ட கீர்த்தி சக்ரா விருதுடன், தனது பெற்றோரின் குருதாஸ்பூரில் உள்ள வீட்டிற்கு ஸ்மிருதி சென்றுவிட்டார். அதனால் அன்ஷுமன் சிங்கின் பெற்றோர் கவலையடைந்துள்ளனர். அவர்கள் தங்களது மகனுக்கு வழங்கப்பட்ட கீர்த்தி சக்ரா விருதை தொட்டு பார்க்க ஆசைப்படுவதாகவும், ஆனால் தனது மருமகள் அந்த விருதினை தனது பெற்றோர் வீட்டிற்கு எடுத்து சென்று விட்டதாகவும் கூறுகின்றனர். மேலும் தனது முகவரியின் ஆவணங்களை குர்தாஸ்பூருக்கு மாற்றிவிட்டதாகவும் கவலையடைந்துள்ளனர். மகனை இழந்தது மட்டுமின்றி, மருமகளும் தங்களை விட்டு சென்றுவிட்டதால் பெரும் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து அன்ஷுமன் சிங்கின் தந்தை ரவி பிரதாப் சிங் கூறுகையில், ‘ராணுவத்தில் பணியாற்றிய எனது மகன், தனது அசாத்திய துணிச்சலுக்காக கீர்த்தி சக்ராவைப் பெற்றார். ஆனால் அந்த விருதை ஒருமுறை கூட நாங்கள் தொட்டுக் கூட பார்க்கவில்லை. எங்களது மருமகள் ஸ்மிருதி சிங், எங்களுடன் வசிக்கவில்லை. ஆனால், எங்களது மகனின் மரணத்துக்குப் பிறகு அவருக்குத்தான் அனைத்து பணப்பலன்களும் கிடைத்திருக்கிறது. எனவே, நெருங்கிய வாரிசு என்று கொண்டுவரப்பட்டிருக்கும் விதிமுறை சரியாக இல்லை. இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசியிருக்கிறோம். திருமணமாகி ஐந்து மாதங்கள் தான் ஆகிறது. அவர்களுக்குக் குழந்தையும்
இல்லை. மகன் மரணமடைந்த பிறகு அவரது மனைவி எங்களுடன் வசிக்கவில்லை.

இப்போது எங்களிடம் மகனின் புகைப்படமும் அதற்குப் போடப்பட்ட மாலையும் தான் இருக்கிறது. எனவே, மரணமடையும் ராணுவ வீரர்களின் நெருங்கிய உறவினர் அல்லது வாரிசு தொடர்பான சட்ட விதியில் மாற்றம் செய்ய வேண்டும். ராணுவ வீரர்கள் மரணமடையும் நிலையில், அவரது மனைவி வீரரின் குடும்பத்துடன் இருக்கிறாரா? என்பதையும், யார் உண்மையிலேயே அவரை நம்பியிருந்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த விதியில் திருத்தம் மேற்கொண்டால், எங்களைப் போல பல பெற்றோர் காப்பாற்றப்படுவார்கள்’ என்றார். ராணுவ வீரர்கள் மரணமடையும் நிலையில், அவரது மனைவி வீரரின் குடும்பத்துடன் இருக்கிறாரா? என்பதையும், யார் உண்மையிலேயே அவரை நம்பியிருந்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

என்ஓகே விதியில் மாற்றம் தேவை
பொதுவாக ஒருவர் ராணுவத்தில் சேரும்போது, அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர்தான், அவருக்கு அடுத்த நெருங்கிய உறவினராக சேர்க்கப்படும். ஒருவேளை ராணுவ வீரருக்கு திருமணமாகிவிட்டது என்றால், அவரது வாழ்க்கைத் துணையின் பெயர் சேர்க்கப்படும். இந்த விதியையை தான் என்ஓகே என்கின்றனர். அன்ஷுமன் சிங்கின் தாய், தந்தையை விட்டு மருமகள் சென்றுவிட்டதால், தற்போது என்ஓகே விதியில் மாற்றம் செய்வது விவாதப் பொருளாகி உள்ளது. பணியில் இருக்கும் ராணுவ அதிகாரி அல்லது வீரருக்கு ஏதாவது நேர்ந்தால், இழப்பீட்டுத் தொகை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் என்ஓகேக்கு வழங்கப்படும். ராணுவ வீரர் திருமணமானவராக இருந்தால், அந்தத் தொகை அவரது மனைவிக்கும், இல்லையென்றால் அவரது பெற்றோருக்கும் வழங்கப்படும். தற்போது இந்த விதிகளை மாற்ற வேண்டும் என்று அன்ஷுமன் சிங்கின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். ஒருவேளை இந்த விதியை மாற்றினால் வீரமரணமடைந்த வீரரின் மனைவி மட்டுமின்றி, அந்த வீரரின் பெற்றோருக்கும் கொஞ்சம் பணபலன் கிடைக்கும் என்கின்றனர்.

The post திருமணமான 5 மாதத்தில் கணவர் வீர மரணம் அடைந்ததால் ‘கீர்த்தி சக்ரா’ விருதுடன் தாய் வீட்டுக்கு சென்ற மருமகள்: பணப்பலன்கள் ஏதும் கிடைக்காமல் தவிக்கும் பெற்றோர் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Anshuman Singh ,
× RELATED காவலில் இருக்கும் குற்றவாளிகள்...