நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு அடுத்த பெரிய சுற்றுலா தலம் திற்பரப்பு அருவி. இங்கு மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் கோதையாறு அருவியாக விழுவதால் குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் திற்பரப்பு அருவி குமரியின் குற்றாலம் என அழைக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகுதியாக காணப்படும். இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காக்கள், சிறுவர் நீச்சல் குளம் போன்றவை உள்ளன. பெரிய சுற்றுலா தலங்களில் உள்ளது போன்ற நவீன தங்கும் விடுதிகள், ரிசார்ட்கள் உள்ளதால் வெளியூர்களில் இருந்து விடுமுறையை கழிக்க வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 2 மாத காலமாக கோடை மழை, பருவ மழை மாறிமாறி பெய்து வந்த நிலையில் நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்கள் மழை சற்று தணிந்து இருந்த நிலையில் நேற்று முதல் மழை மீண்டும் பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கோதையாற்றில் தண்ணீர் அதிகம் பாய்வதால் கடந்த 2 மாதங்களாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குளிக்கும் ஆவலுடன் வரும் சுற்றுலா பயணிகள் இங்கு குளு குளு சீசனை அனுபவித்தவாறு அருவி மற்றும் அருகில் உள்ள நீச்சல் குளத்தில் ஆனந்தமாக நீராடி மகிழ்கின்றனர். இந்த நிலையில் இன்று விடுமுறை என்பதால் காலை முதல் பயணிகள் கூட்டம் களை கூட்டியுள்ளது. வெயிலின் தாக்கம் இல்லாமல் மேகமூட்டத்துடன் இருண்ட வானிலை நிலவுகிறது.
அவ்வப்போது சாரல் மழையுடன் இதமான காற்றும் வீசி குளு குளு சீசன் நிலவுகிறது. இது சுற்றுலா பயணிகளுக்கு உற்சாகத்தை கொடுத்தது. இதே போன்று திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணை நிரம்பி வழிகிறது. இங்கு நடைபெறும் உல்லாச படகு சவாரியிலும் சுற்றுலா பயணிகள் ஆவலுடன் சென்று கடல் போல் தேங்கி நிற்கும் தடுப்பணையின் அழகையும் கோதையாற்றின் இயற்கை அழகையும் பார்த்து மகிழ்கின்றனர்.
யானைகளின் குளியல்
திற்பரப்பு சுற்று வட்டார பகுதிகளில் சில வளர்ப்பு யானைகள் உள்ளன. அவற்றை பாகன்கள் அடிக்கடி திற்பரப்பு தடுப்பணை பகுதிக்கு அழைத்து வருவார்கள். அந்த வகையில் நேற்றும் 2 யானைகளை பாகன்கள் அழைத்து வந்தனர். தடுப்பணையில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீரில் 2 யானைகள் ஆனந்த குளியல் போட்டன. அவை தண்ணீரில் படுத்து உருண்டன. யானைகள் தண்ணீரில் உல்லாச குளியல் போடுவதை கண்ட சுற்றுலா பயணிகள் ஆவலுடன் செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.
The post சாரல் மழையால் குளு குளு சீசன்: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் appeared first on Dinakaran.