×

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் சீசன் நிறைவு வரத்து குறைந்ததால் ஏலக்காய் விலை எகிறியது

*கிலோ ரூ.2,614க்கு விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

போடி : தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள ஏலத்தோட்டங்களில் ஏலக்காய் எடுக்கும் சீசன் நிறைவடைந்தது. இந்தாண்டு வரத்து குறைந்தாலும், ஏலக்காய் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தேனி மாவட்டம், போடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில், தமிழக-கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டத்தில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி நடந்து வருகிறது.

குறிப்பாக போடி மெட்டு, பியல்ராம், தோண்டிமலை, தலக்குளம், கோரம்பாறை, பூப்பாறை, யானையிரங்கல், பெரியகானல், முட்டுக்காடு, சின்னக்கானல், சூரியநல்லி, சாந்தன்பாறை, சேரியார், சேனாதிபதி, புத்தடி, கஜானாபாறை, உடுப்பஞ்சோலை, ராஜாக்காடு, ராஜகுமாரி, குஞ்சு தண்ணி, வண்டன்மேடு, கம்பம்மெட்டு என பல்வேறு பகுதிகளில் ஏலக்காய் பயிரிட்டு வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் தமிழக விவசாயிகளுக்கு சொந்தமான ஏலத்தோட்டங்கள் அதிகமாக உள்ளன.

இந்த தோட்டங்களில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பலர் தோட்டங்களில் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஓராண்டுக்கு 6 முறை ஏலச்செடிகளில் இருந்து ஏலக்காய் பறிக்கப்படும்.

ஸ்பைசஸ் போர்டு மூலம் விற்பனை

ஏலத்தோட்டங்களில் பறிக்கும் ஏலக்காய்களை கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள புத்தடி மற்றும் தேனி மாவட்டம், போடியில் இயங்கும் ஸ்பைசஸ் போர்டு (இந்திய நறுமண வாரியம்) மூலம் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இங்கு நடக்கும் ஆன்லைன் ஏலத்தில் தமிழக-கேரள விவசாயிகள் கலந்து கொண்டு ஏலக்காய்களை கொள்முதல் செய்கின்றனர். பின்னர் அவைகளை தரம்பிரித்து உள்ளூருக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். இந்திய ஏலக்காய்களுக்கு போட்டியாக அமெரிக்காவில் உள்ள கவுதிமாலாவில் விளைவிக்கப்படும் ஏலக்காய்கள் விற்பனைக்கு வந்தன.

ஆனால், அவைகளின் தரம் நமது ஏலக்காய்க்கு போட்டியாக இல்லை. இதனால், மருத்துவ குணமிக்க இந்திய ஏலக்காய்களுக்கு உலக நாடுகளில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. கடந்தாண்டு பல்க் (மொத்த) ஏலக்காய் கிலோ 800க்கு தொடங்கி ரூ.1300 வரை உயர்ந்தது. கடந்தாண்டு ஆடி 18ம் தேதி இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் சீசன் தொடங்கியது. 45 நாட்களுக்கு ஒருமுறை ஏலச்செடிகளில் இருந்து ஏலக்காய் பறிக்கப்படும். தொடர்ந்து 10 மாதத்தில் 6 பறிப்புகளாக அறுவடை நடந்து, கடந்த மார்ச் மாதம் சீசன் நிறைவு பெற்றது.

வரத்து குறைந்தாலும் விலை சூப்பர்…

கடந்தாண்டு சீசன் தொடங்கும் முன்பு இடுக்கி மாவட்டத்தில் தொடர் மழையால், ஏலச்செடிகளில் தண்ணீர் தேங்கி அழுகல் ஏற்பட்டது. 50 சதவீதம் மட்டும் ஏலக்காய் மகசூல் இருந்தது. இதனால், ஏலக்காய் வரத்து குறைந்தது. இந்நிலையில், பல்க் எனப்படும் மொத்த ஏலக்காயின் விலை கிலோ ரூ.2,300 ஆகவும், வெளிநாடுகளுக்கு செல்லும் ஏ ஜோன் ஏலக்காய் ரூ.2,614 ஆக உயர்ந்துள்ளது. இதனால், வரத்து குறைந்தாலும் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post தமிழக-கேரள எல்லைப் பகுதியில் சீசன் நிறைவு வரத்து குறைந்ததால் ஏலக்காய் விலை எகிறியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu-Kerala border region ,Western Ghats ,Bodi, Theni district ,
× RELATED விடுமுறை நாட்களையொட்டி கவியருவியில்...