×

விவசாயத்தை பாதிக்கும் வகையில் புதர் மண்டி காணப்படும் காரவிளை கால்வாய் தூர்வாரப்பட்டு தண்ணீர் திறந்து விடப்படுமா ?

ராஜாக்கமங்கலம் : குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல சங்கரன்குழி , எள்ளுவிளை மற்றும் ராஜாக்கமங்கலம் ஊராட்சி பகுதிகளில் வசித்து வரும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிலத்தடி குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் தென்னை மற்றும் வாழை போன்ற விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்து வருவது காரவிளை கால்வாய் ஆகும்.

அனந்தனார் சானலில் இருந்து தம்மத்துக் கோணம் வழியாக காரவிளை கால்வாயில் வரும் தண்ணீர், தம்மத்துக்கோணத்திலிருந்து தாராவிளை, பழவிளை, பூவன்குடியிருப்பு, கிடங்கன்கரைவிளை, வண்டாவிளை,விளாத்திவிளை, பக்தன்காடு , வைராகுடியிருப்பு வழியாக நரி குளம் வரையிலும் செல்கிறது. இதனால் மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் இந்த கால்வாய் நீரானது, செம்பட்டை ஒடை முதல் ராஜாக்கமங்கலம் துறை கடற்கரை பகுதி வரை உள்ள நிலத்தடி நீர் உப்பு நீராகாமலும் பாதுகாத்து வருகிறது.இந்த கால்வாயை பொதுப்பணித்துறையினர் ஒவ்வொரு ஆண்டும் சுத்தம் செய்து தண்ணீர் விடுவது வழக்கம்.

ஆனால் தற்போது இந்த சானலில் எந்த பராமரிப்பு பணிகளும் செய்யப்படாததால் மரம் செடிகள் பெரிய அளவில் வளர்ந்து உள்ளது. இதனால் ரோட்டோரம் காணப்படும் இந்த சானல் அடையாளம் கூட தெரியாத வகையில் உள்ளது. தற்போது இந்த சானலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் தம்மத்துக் கோணத்தில் இருந்து தாராவிளை வரையுள்ள சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் மட்டுமே தண்ணீர் செல்கிறது. அதனைத் தொடர்ந்து பழவிளை, பூவன்குடியிருப்பு, கிடங்கன்கரைவிளை , வண்டாவிளை, விளாத்திவிளை, பக்தன்காடு, வைராகுடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் செல்ல முடியாமல் செடிகள் புதர்கள் மண்டி தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் தண்ணீர் திறந்து விடப்பட்டும் விவசாயத்திற்கும், பொதுமக்களுக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் நிலத்தடி நீர் குறைந்து வருவதோடு விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே பொதுப்பணித்துறை உடனடியாக சானலில் மராமத்து பணிகள் செய்து சுத்தப்படுத்தி கடைமடை வரைக்கும் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வறண்ட பூமியாக காட்சியளிக்கிறது

இதுகுறித்து மேல சங்கரன்குழி ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் கூறியது:

சாந்தபுரம் கால்வாய் ,அனந்தனார் கால்வாய், காரவிளை கால்வாய் மற்றும் கிளை கால்வாய்களில் ஒவ்வொரு வருடமும் ஜூலை முதல் மார்ச் வரை பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். மேலசங்கரன்குழி ஊராட்சி , வெள்ளிச்சந்தை ஊராட்சி ,குருந்தன்கோடு ஊராட்சி ,கணபதிபுரம் பேரூராட்சி, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஆகிய பகுதிகள் கடைவரம்பு பகுதிகளாகும்.

இந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் விவசாயிகளும் இந்த கால்வாயில் வரும் நீரை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தண்ணீர் வரும்போது ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளின் நீர்மட்டமும் உயர்ந்து காணப்படும். விவசாயமும் செழிப்பாக நடைபெறும். தண்ணீர் வராத போது நீர்மட்டம் வெகுவாக குறைந்து உப்பு நீர் கலந்து குடிநீருக்கு தட்டுப்பாடும் ஏற்படுகிறது. விவசாயமும் பாதிக்கப்பட்டு வறண்ட பூமியாக காட்சியளிக்கிறது. மேலும் கடை வரம்பு பகுதிகளில் நீரை சேமித்து வைக்க எந்த ஏரிகளும் இல்லை. குளங்களும் முறையான பராமரிப்பு இல்லாதால் வறண்டு விடுகிறது.

அதிகாரிகள் அலட்சியம்

முத்து சரவணன் மேலும் கூறியது : பொதுவாக கால்வாய்கள் அனைத்தும் தண்ணீர் திறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக பொதுப்பணித்துறையால் தூர்வாருவது வழக்கம். ஆனால் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் எந்த கால்வாயும் தூர்வாரப்படவில்லை. கால்வாயிலுள்ள மதகுகளும் சரியான முறையில் பராமரிக்காததால் பல மதகுகள் உடைந்து பயன்படுத்தமுடியாத வகையில் உள்ளது.

அதுமட்டுமின்றி பொதுமக்களாலும் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பலர் ஆடு மாடுகளுடைய கழிவுகளை ஆற்றில் விடுவதால் மிகவும் மாசடைந்து காணப்படுகிறது. அதையும் பொதுப்பணித்துறை கண்டுகொள்ளாமல் உள்ளது. கோணம் , மறுகால் தலவிளை ஆகிய பகுதிகளும் அணைநீரையே நம்பியுள்ள கிராமங்கள் ஆகும். எனவே அமைச்சர் , சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் பாரளுமன்ற உறுப்பினரும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி அணை தண்ணீரை கடைவரம்பு பகுதிக்கு கொண்டு செல்ல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தவேண்டும்.

The post விவசாயத்தை பாதிக்கும் வகையில் புதர் மண்டி காணப்படும் காரவிளை கால்வாய் தூர்வாரப்பட்டு தண்ணீர் திறந்து விடப்படுமா ? appeared first on Dinakaran.

Tags : Karavila canal ,Rajakamangalam ,Mela Sankarankuzhi ,Elluvilai ,Rajakamangalam panchayat ,Kumari District ,Rajakamangalam Panchayat Union ,
× RELATED காரங்காட்டில் இரட்டைக் கரை கால்வாயை தூர்வாரிய கத்தோலிக்க சங்கத்தினர்