×

நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் ஒப்பந்ததாரர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்

நாகர்கோவில் : குமரி மாவட்டம் ஆண்டிற்கு இரு பருவமழை பெறும் மாவட்டமாகும். இதனால், இங்கு நிதியாண்டு முடியும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு சார்பில் மராமத்து மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதன்படி, கடந்த 2023 மற்றும் 24ம் நிதியாண்டில், பணிகள் நடைபெற்றன. இதன்படி தக்கலை சப்.டிவிசனில் 2023ம் ஆண்டு மே மாதம் 21 மராமத்து பணிகள் நடந்தது. இந்த பணிகளுக்கான ரூ.5 கோடி நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.

இந்த தொகையை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்காமல் அரசுக்கு சரண்டர் செய்துவிட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அரசு ஒப்பந்ததாரர்கள் கடந்த 2நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று 3வது நாளாக பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் போராட்டம் தொடர்ந்தது. சங்க தலைவர் டேவிட் ராஜ், செயலாளர் ஜோசப் கலையரசு, இணை செயலாளர் இளங்கோ பிரபு, பொருளாளர் நிக்சன் ஆல்வின் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிமுக மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ அங்கு வந்தார். அவர், பொதுப்பணித்துறை அமைச்சரின் உதவியாளர், தலைமைப்பொறியாளர் மற்றும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த பிரச்னை தொடர்பாக கலெக்டரிடம் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளவும், முதல்வர் அலுவலக கவனத்திற்கு கொண்டு செல்லவும்கூறினேன். பொதுப்பணித்துறை அமைச்சர் உதவியாளர் உமாபதி, காவல் துறை உயர் அதிகாரிகளிடமும் பேசியுள்ளேன். அவர்களுக்கு நியாயமான நிதியும், நீதியும் கிடைக்க வேண்டும் என்றார்.

இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் ஆதரவு தெரிவித்து பேசினர். தொடர்ந்து பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் தொடர்வதால் செயற்பொறியாளர் நேற்று அலுவலகத்துக்கு வரவில்லை.

The post நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் ஒப்பந்ததாரர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil Public Works Office ,Nagercoil ,Kumari ,Water Resources Division ,Public Works Department ,Nagercoil Public Works Office Complex Contractors ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார...