×
Saravana Stores

கார் சாகுபடி பணிகள் தீவிரம் உருட்டு விதைகள் இயந்திரம் மூலம் நெல் சாகுபடி; விவசாயிகள் உற்சாகம்

*நாற்று நடுவைக்கான செலவுகள் குறைந்தது

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், உருட்டு விதைகளுக்கான இயந்திரங்கள் மூலம் விவசாயிகள் நெல் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நாற்று நடுவைக்கான செலவுகள் கணிசமாக குறைந்துள்ளதாக விவசாயிகள் உற்சாகத்தோடு தெரிவித்து வருகின்றனர்.

தாமிரபரணி பாசன பரப்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் ஆண்டுதோறும் கார், பிசானம் ஆகிய இரு சாகுபடிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோடை காலங்களில் அணைகளிலும், குளங்களிலும் போதிய அளவு நீர் இருப்பு இருந்தால், முன்கார் சாகுபடியையும் விவசாயிகள் மேற்கொள்வது வழக்கம். இவ்வாண்டு கார் பருவ நெல் சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து கடந்த ஜூன் 5ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அணையில் போதிய அளவு நீர் இருப்பு காரணமாக இவ்வாண்டு வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய்கள் மட்டுமின்றி, நெல்ைல மாநகர பகுதிகளை ஒட்டி செல்லும் பாளை, நெல்லை, கோடகன் கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களிலும் தற்போது கார் பருவ நெல் சாகுபடி களை கட்டியுள்ளது.

நெல்லையை சுற்றியுள்ள தருவை, திருவேங்கடநாதபுரம், சுத்தமல்லி, நரசிங்கநல்லூர், குன்னத்தூர், கருப்பந்துறை, பாலாமடை, ராஜவல்லிபுரம், கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நாற்று நடும் பணியை துவங்கி நடத்தி வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 20 தினங்களாக ஒரே சமயத்தில் விவசாயிகள் நாற்று நடும் பணிகளை மேற்கொண்டு உள்ளதால், கூலிக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இரு மாவட்டங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் நாற்று நடும் தொழிலாளர்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று காலை, மாலை என இரு வேளைகளாக பிரித்து நடுவை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு நாற்று நடுவதற்கு குறைந்தபட்சம் 20 பேராவது தேவைப்படும் நிலையில், நாற்றங்காலில் இருந்து நாற்றுக்களை பிடுங்கி நட ரூ.10 ஆயிரம் வரை செலவுகள் ஆவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே பெரும்பாலான விவசாயிகள் கால மாற்றத்திற்கு ஏற்ப இயந்திர நெல் சாகுபடிக்கு தாவியுள்ளனர். சில விவசாயிகள் டிரில்லர் மிஷின்கள் மூலமும், சில விவசாயிகள் உருட்டு நெல் சாகுபடி இயந்திரங்கள் மூலமும் நடுவை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாளை சுற்றுவட்டாரங்களில் இப்போது விவசாயிகள் உருட்டு விதைகள் மூலம் வயலில் நேரடி நெல் விதைப்பை நேர்த்தியாக மேற்கொண்டு வருகின்றனர். விதைகளை நனைய வைத்து உருட்டு விதை இயந்திரங்களில், ஒரு இயந்திரத்திற்கு ஒரு கிலோ விதை என்ற கணக்கில் இடுகின்றனர். ஒரு குழியில் 16 விதைகள் விழும் வகையில் உருட்டு நெல் சாகுபடியில் கணக்கிட்டு விதைகள் விழுகின்றன. விவசாயிகள் தொழி வயலுக்குள் இயந்திரத்தை இழுத்து கொண்டே செல்லும்போது, அதில் இருந்து விழும் உருட்டு விதைகள் நெல் நடவு பணிகள் இயல்பாக நடக்கிறது.

இதுகுறித்து பாளை வட்டார விவசாயிகள் கூறுகையில், ‘‘உருட்டு நெல் சாகுபடி மூலம் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் மகசூலை கண்டு வருகிறோம். இச்சாகுபடியில் அதிகமாக அம்பை 16 மற்றும் கோவை 51 ரக நெல் விதைகளையே அதிகம் பயன்படுத்துகிறோம். இந்த உருட்டு நெல் விதைப்பு மூலம் எங்களுக்கு 7 மரக்கா விதைப்பாட்டிற்கு வெறும் ரூ.700 மட்டுமே நெல் நடுவைக்கு செலவாகிறது.

அதேசமயம் கூலியாட்கள் மூலம் நடுவையை மேற்கொள்ளும்போது, ஒரு ஆளுக்கு சம்பளம் ரூ.300 என வைத்து கொண்டால் கூட, 12 பேருக்கு ரூ.3600 வரை கொடுக்க வேண்டியதுள்ளது. மேலும் அவர்களை அழைத்து வர ஆட்டோ செலவு, மதியம் டீ, டிபன் செலவுகளையும் நாங்களே மேற்ெகாள்ள வேண்டியதுள்ளது. எனவே உருட்டு விதைகளை இயந்திரம் மூலம் வயல்களில் பாவுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறோம்’’ என்றனர்.

The post கார் சாகுபடி பணிகள் தீவிரம் உருட்டு விதைகள் இயந்திரம் மூலம் நெல் சாகுபடி; விவசாயிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Nellie ,Dinakaran ,
× RELATED நெல்லை பல்கலைக்கழகத்தில் ஏவிபி மாநில...