×
Saravana Stores

ராமநாதபுரம் அருகே ஹீப்ரு மொழி கல்வெட்டு கண்டுபிடிப்பு

*60 ஆண்டுகளாக சலவைக்கல்லாக பயன்பாடு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே 60 ஆண்டுகளாக சலவைக்கல்லாக பயன்படுத்தப்பட்ட ஹீப்ரு மொழி பதிவு செய்யப்பட்ட கல்வெட்டை தொல்லியல்துறையினர் ஆய்வு செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, பெரியபட்டினம், திருப்புல்லாணி கடற்கரை பகுதி என்பதால் கடல் பாறைகள் அதிகமாக உள்ளது. இந்த உவர்ப்பு பாறைகள் இப்பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற மன்னர் காலத்து கோயில்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அது போன்ற பாறைகளின் எச்சங்கள் இப்பகுதியில் அதிகமாக இருக்கிறது.ராமநாதபுரம் அருகே உள்ள பெரியபட்டினம் அருகே வண்ணாங்குண்டு மரக்கையார்நகர் பாலு என்பவரின் விவசாய இடத்தில் ஒரு பாறைக்கல் இருந்துள்ளது. அந்த கல்லை அவர் சுமார் 60 ஆண்டுகளாக துணி துவைக்கும் சலவைக்கல்லாக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. 3 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட அந்த கல்லில் வேற்றுமொழி எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருந்துள்ளது.

இக்கல்லை ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர் ஹாத்திம் கூறும்போது, ‘‘1946ம் ஆண்டு பெரியபட்டினம் பகுதி கல்லறையில் இதேபோன்று மொழி எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட அதில் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும், யூத கோயில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் யூத கோயில் பெரியபட்டினத்தில் இருந்ததற்கான சான்றுக்கான கல்வெட்டு என்பது அதன் மூலம் தெரிய வந்தது.

அந்த கல்வெட்டு ராமநாதபுரம் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது 2வது கல்வெட்டு ஆகும்’’ என்றார்.இதுகுறித்து தொல்லியல் அலுவலர்களிடம் கூறும்போது, ‘‘வண்ணாங்குண்டு பகுதியில் கிடைத்த கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பழங்காலத்தில் கீழக்கரை, பெரியபட்டினம் போன்ற பகுதி பெரிய வணிக நகர்களாக இருந்துள்ளன. இப்பகுதிக்கு, பல்வேறு நாட்டினர், பல்வேறு தரப்பினர் வந்து சென்றுள்ளனர். அதுகுறித்த தகவல் ஏதும் இடம் பெற்றிருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’’ என்றனர்.

The post ராமநாதபுரம் அருகே ஹீப்ரு மொழி கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram district ,Keezakarai ,Periyapatnam ,Tirupullani ,
× RELATED பரமக்குடி அருகே ரயில் பிரேக் ஷூ கழன்று வந்து தாக்கியதில் விவசாயி பலி