×

20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் கோயில் குடமுழுக்குகள்: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்; 66 ஆண்டுகளுக்கு பிறகு பாம்பன் சுவாமிகள் கோயிலில் நடந்தது

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் கோயில் குடமுழுக்கு நடந்துள்ளது என அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் கொண்டார். சென்னை திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர் கோயிலுக்கு 66 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடந்தது. விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.செந்தில் குமார், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா, இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், இணை ஆணையர்கள் உள்ளிட்ட அலுவலர்கள், இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: திமுக அரசு பதவி ஏற்ற நாள் முதல் கோயில்கள் எங்கும் மணியோசையும், தீப ஆராதனைகளும், தேவாரம், திருவாசகங்களும், எங்கு நோக்கிலும் பக்தர்களின் பக்தி பரவச குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. ஆண்டுகள் பல கடந்து குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த கோயில்களில் குடமுழுக்கையும், தெப்பத் திருவிழா நடைபெறாமல் இருந்த கோயில்களில் தெப்பத் திருவிழாவையும், ஓடாமல் இருந்த மர தேர்கள், வெள்ளித்தேர்கள், தங்கத்தேர்களை முழுமையாக ஓட வைத்த பெருமையும் முதல்வரை சாரும்.

கோயில்களில் பக்தர்களின் அடிப்படை தேவைகளுக்காக விருந்து மண்டபம், முடி காணிக்கை மண்டபம், சஷ்டி மண்டபம், திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி போன்றவற்றையும் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்களுக்கு அலுவலகம் கட்டுதல், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்புகள், பொங்கல் கருணைத்தொகை, ஓய்வூதியம் உயர்வு, பொங்கலுக்கு புத்தாடைகள் வழங்குதல் என்று ஆன்மிக புரட்சியை இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 38 மாதங்களில் செய்வதற்கரிய பல செயல்களை இந்த ஆட்சி செய்து முடித்திருக்கிறது.

மேலும் 65 கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. குறிப்பாக 100 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடந்த மணப்பாறை முக்தீஸ்வரர், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்கள் குடமுழுக்கு நடந்திருக்கிறது. ஏழு கடல் தாண்டி, ஏழுமலை தாண்டி, ஏழு குகை தாண்டி அற்புத விளக்கை மீட்டோம் என்று பழங்காலத்தில் சொல்வதைபோல இன்றைக்கு நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி, 66 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கும், 36 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயமும் செய்யப்பட்ட திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர் கோயிலுக்கு 18 ஆண்டுகளாக நீதிமன்றத்திலிருந்த வழக்கு முழுவதுமாக முடிவு பெற்று இன்றைக்கு முருக பக்தர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும் வகையில் குடமுழுக்கு நடந்துள்ளது.

இது இந்த பகுதியில் மட்டுமல்லாது, நாடு முழுவதும், உலகம் முழுவதும் குலதெய்வமாக முருகனை வழிபடுகின்றவர்கள், இன்றைக்கு பக்தி பரவசத்தோடு முதலமைச்சரை பாராட்டுவதை எங்கும் கேட்க முடிகிறது. இங்கு கூடியிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் எங்களுக்கு வாழ்த்து சொல்வதிலிருந்து அவர்களின் மகிழ்ச்சியை அறிய முடிகிறது. இதுபோன்ற பணிகள் இந்த ஆட்சியில் தொடரும். இந்த குடமுழுக்கு விழா சிறப்புற நடைபெற துணைநின்ற நீதிபதிகள், துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நன்றி. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,921 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளது. உபயதாரர்கள் அதிக அளவிற்கு தங்களுடைய பங்களிப்பை அளித்துள்ளார்கள். கோயில்களின் உண்டியல் வருமானம், சொத்துகளின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை வைத்து தான் திருவிழாக்கள் மற்றும் இறைவனை நாடி வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை இதுவரையில் நிறைவேற்றி கொண்டிருந்தோம்.

இதுவரையில் இல்லாத அளவிற்கு ரூ.920 கோடி அரசு மானியமாக இந்து சமய அறநிலையத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. மூத்தக் குடிமக்கள் ஆன்மிக பயணம் செல்வதற்கு ஏதுவாக அறுபடை வீடு ஆன்மிகப் பயணம், ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கும் ஆன்மிகப் பயணம், ராமேசுவரம் – காசி ஆன்மிக பயணம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் குடமுழுக்கு நடப்பது இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (நேற்று) தான். கோயில் பணிகள், குடமுழுக்குகள் மன்னர் ஆட்சி காலத்தில் செய்தது போல் தமிழகத்தின் மாமன்னன் தளபதி ஆட்சியிலும் தொடரும். சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் திருவிழாக் காலங்களிலும் கனகசபை மீதேறி தரிசனம் செய்திட நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் கோயில் குடமுழுக்குகள்: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்; 66 ஆண்டுகளுக்கு பிறகு பாம்பன் சுவாமிகள் கோயிலில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu Perumitham ,Pampan Swamy temple ,CHENNAI ,Shekharbabu ,Hindu Religious Charities Department ,Thiruvanmiyur Bomban Kumaragurudasar Temple ,
× RELATED மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி...