×

இந்தியாவிலேயே ஆதிதிராவிட மக்களின் நலன் காப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது: இளைஞர்களின் கல்வி திட்டங்களுக்கு ரூ.2,252 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இந்தியாவிலேயே ஆதிதிராவிட மக்களின் நலன் காப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது. இளைஞர்களின் கல்வி திட்டங்களுக்கு மட்டும் ரூ.2,252 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் வழியினை பின்பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் ஒருங்கிணைந்த சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் 2023-24 மே மாதம் அறிவிக்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் உன்னத திட்டத்திற்கான தொழில் முதலீட்டில் 35 சதவீத தொகை மானியமாகவும், 65 சதவீத தொகைக்குரிய வங்கி கடன் வட்டியில் 6 சதவீத தொகை வட்டி மானியமாகவும் அளிக்கப்படுகிறது.

ஊரகப் பகுதி மட்டுமல்லாது நகர்ப்புறப் பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம் ஆண்டுக்கு ரூ.200 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் 1,000 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு இவ்வாண்டில் ரூ.230 கோடியில் பணிகள் நடக்கின்றன. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கு ஏற்றவாறு, 85,000 ரூபாயில் இருந்து 8.25 லட்சம் வரை வழங்கப்பட்ட உதவித்தொகை குறைந்தபட்சம் 1 லட்சமாகவும், அதிகபட்சம் 12 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது. பாதிக்கப்ட்ட குடும்பங்களை சார்ந்த 154 பேருக்கு வேலைவாய்ப்புகளும், 535 பேருக்கு ஓய்வூதியமும், ஒருவருக்கு இலவச வீட்டுமனையும் வழங்கப்பட்டுள்ளன.

2024-25ம் ஆண்டில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.2,992.57 கோடி. இதில், கல்வி சார்ந்த திட்டங்களுக்காக ரூ.2,252.51 கோடி. அதாவது, 75.27 விழுக்காடும், பழங்குடியின இளைஞர்களின் கல்விக்காக 43.23 விழுக்காடும் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பொறியியல், நிதி, உலக சுகாதாரம், உலகத் தொழில், சட்டம் போன்றவைகளில் முதுகலை படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் ஆதிதிராவிட – பட்டியலின மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.36 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 54 ஆதிதிராவிட – பட்டியலின இளைஞர்கள் ஆண்டுதோறும் பயன்பெறுகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் உயர்த்தப்பட்ட உதவித்தொகை, விடுதி வசதி முதலிய சலுகைகளால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், பழங்குடியின உண்டி உறைவிடப் பள்ளிகளிலும் 28,85,168 ஆதிதிராவிட மாணவர்களும் 25,337 பழங்குடியின மாணவர்களும் பயின்று வருகின்றனர். இளைஞர்களின் உயர்கல்வி ஆர்வத்தை தூண்டும் பொருட்டு முனைவர் பட்டப்படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை ரூ.50,000 என்பது 1 லட்சம் என்று உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பில் 150 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 480 புதிய வகுப்பறைகள், 15 அறிவியல் ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர் விடுதிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உணவுப்படி ரூ.1,100ல் இருந்து, ரூ.1,400 ஆகவும், கல்லூரி மாணவர் விடுதிகளில் தங்கி பயிலுவோருக்கு மாதம் ஒன்றுக்கு உணவுப்படி ரூ.1,100 என்பது ரூ.1,500ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பிளஸ்2 மாணாக்கருக்கு உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்கள் கல்வியை சிறப்பாக பயிலும் பொருட்டு ரூ.300 கோடியில் விடுதி கட்டிடங்களும், விடுதி பராமரிப்பு பணிகளும் நடைபெறுகின்றன. 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் மின் இணைப்பு ரூ.46.65 கோடியில் வழங்கப்பட்டுள்ளது. 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நீர் பாசன பிவிசி குழாய்கள் வாங்க தலா ரூ.15,000 வீதம் ரூ.3 கோடி வழங்கப்பட்டுள்ளது.

2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின்மோட்டார் வாங்க தலா ரூ.10,000 வீதம் ரூ.2 கோடி மானிய மாக வழங்கப்பட்டுள்ளது. 10,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகள் வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் பயிற்சிகள் வழங்க ரூ.10 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட தொழில் திட்டங்கள் தொடர்பான பயிற்சிக்கு ரூ.250 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் விற்பனை முகவராக ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

40 ஆதிதிராவிடர், பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ரூ.40 லட்சத்தில் ஏற்படுத்தவும், 1,000 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு தீவன புல் வளர்க்கவும் விதை தொகுப்பு மற்றும் புல்கறணைகள் ரூ.100 கோடியில் வழங்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடற்ற 443 இருளர் பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ.19.38 கோடியில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது. 17 மாவட்டங்களில் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் 20 சமுதாய கூடங்கள் ரூ.24 கோடியில் கட்டப்படுகின்றன.

2023 – 24ம் நிதியாண்டில் மாநில அரசு நிதியுதவியுடன் 12 பேர் கொண்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஒரு குழுவிற்கு ரூ.2.50,000 வீதம் 229 குழுக்களுக்கு ரூ.5.72 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. தேசிய துப்புரவுப் பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின்மூலம் 587 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ரூ.1.09 கோடி கால முறை கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட சமுதாய மக்களின் முன்னேற்றத்தில் முதல்வர் தனிக்கவனம் செலுத்துவதால் வாழ்க்கைத தரம் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைகிறது. அரசின் சீரிய முயற்சியால் ஆதிதிராவிட இளைஞர்கள் கல்வி, தொழிலில் முன்னேற்றம் அடைந்து சமத்துவ சமுதாயத்தின் பிரதிநிதிகளாக உருவாகி வருகிறார்கள். இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலுள்ள சிறந்த கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி, முனைவர் படிப்பு பயின்று வருகின்றனர்.

* ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.2,992.57 கோடி. இதில், கல்வி சார்ந்த திட்டங்களுக்காக மட்டும் ரூ.2,252.51 கோடி. பழங்குடியின இளைஞர்களின் கல்விக்காக 43.23 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பொறியியல், நிதி, உலக சுகாதாரம், உலகத் தொழில், சட்டம் போன்றவைகளில் முதுகலை படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிட – பட்டியலின மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.36 லட்சம் கல்வி உதவித் தொகை.
* காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் வீடற்ற 443 இருளர் பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ.19.38 கோடி செலவில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.
* தேசிய துப்புரவுப் பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் 587 தூய்மைப் பணியாளர்கள், குடும்பத்தினருக்கு ரூ.1.09 கோடி கால முறை கடன் வழங்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவிலேயே ஆதிதிராவிட மக்களின் நலன் காப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது: இளைஞர்களின் கல்வி திட்டங்களுக்கு ரூ.2,252 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Chennai ,Chief Minister ,M.K.Stal ,Tamil Nadu government ,Periyar, ,Anna ,Dinakaran ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய...