நெல்லை: கிராமங்களில் மாப்பிள்ளை பார்த்துவிட்டு செல்லும் பெண் வீட்டார், தங்கள் உறவினர்கள் மூலம் மாப்பிள்ளையின் குணநலன்களை விசாரிப்பது வழக்கம். அப்போது பஞ்சாயத்து போர்டு மற்றும் ஊர் திண்ணைகளில் வெட்டிக் கதைகளோடு குழுமியிருக்கும் சில பெரிசுகள், ‘அவனுக்கா பொண்ணு கொடுக்க போறீங்க’ என்று கலைத்துவிடும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுவதுண்டு. இதனால் பல திருமண பேச்சுகள் ஆரம்ப கட்டத்திலேயே நின்றுவிடுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் திருமணத்தை தடுத்தவர்களை கண்டித்து நெல்லையில் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள பொன்னாக்குடி கிராமத்தில் வரன் பார்க்கச் செல்லும் பெண் வீட்டார்களிடம் இளைஞர்களைப் பற்றி சிலர் குறை கூறுவதாகவும், அதனால் பல திருமணங்கள் பேச்சுவார்த்தையோடு நின்றதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த நபர்களால் மூன்றடைப்பு பகுதியில் இளைஞர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்களை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‘புறம் பேசி திருமணத்தை தடுக்க நினைக்கிறீயே நீ நல்லா இருப்பியா?’ என திருமணமாகாத வாலிபர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
‘ஊரில் திருமண வரன்களை தடை செய்வோரே! எத்தனை வருஷம் நல்லா வாழ்ந்துருவீங்க, உன் பிள்ளைக்கு இதுமாதிரி நடந்தா?’’ என்று முதிர்கண்ணன்களின் சாபங்களும் இந்த போஸ்டரில் அதிகம் ஆக்கிரமிக்கின்றன. மேலும், புறம் பேசி திருமணத்தை தடுக்க நினைக்கும் நபர்களை அடுத்த போஸ்டரில் புகைப்படத்தோடு வெளியிடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர். இந்த போஸ்டர் விவகாரம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
The post கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனதால் வாலிபர்கள் விரக்தி திருமணத்தை தடுக்கிறீயே… நீ நல்லா இருப்பீயா…? பெண் வீட்டார்களிடம் குறை சொல்லியவர்களை கண்டித்து போஸ்டர் appeared first on Dinakaran.