×

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால அவகாசம் 31ம் தேதி வரை நீட்டிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் அறிவிப்பு

சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-25ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை செய்வதற்கான இணையதள கலந்தாய்வு கடந்த மாதம் 28ம் தேதியுடன் நிறைவு செய்யப்பட்ட நிலையில் மாணவர்களின் நலன் கருதி 8ம் மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் கடந்த 1ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை ஏற்கனவே வழங்கப்பட்டது. தற்பொழுது மாணவர்களின் நலன் கருதி வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடு காலணிகள் விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும்.

சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 80% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் செல்போன் எண் மற்றும் 9499055689 வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

The post தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால அவகாசம் 31ம் தேதி வரை நீட்டிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vocational Training Institutes ,Chennai ,102 Government Vocational Training Centers ,Private Vocational Training Centers ,Tamil Nadu ,and Training Department ,Dinakaran ,
× RELATED ரூ.1.25 கோடியில் மேம்படுத்தப்பட்ட...