தூத்துக்குடி: கலைஞரை பற்றி அவதூறாக பேசிய சீமானுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஒரு கட்சி தலைவர் என்பதற்கான பண்பே இல்லாமல் சீமான் பேசுகிறார். சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சீமான் பேச்சு உள்ளது. 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரை அவதூறாக பேசி வருகின்றனர். அந்த அவதூறு கருத்துகளை கண்டு சீமானும் சிரித்துக்கொண்டு இருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மறைவின் போது இளைய சமூகத்தினருக்கு கருணாநிதி ஒரு படிப்பினை என்று கூறினார், இப்போது இப்படி மாற்றி பேசுகிறார். சாட்டை துரைமுருகன் பேச்சை சீமான் கண்டிக்காதது ஏன்?. கலைஞர் அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை தீட்டியவர். குறிப்பிட்ட சாதியைச் சொல்லி பாட்டு பாடி அந்த சமூகத்தை மீண்டும் அவமதித்துள்ளார் சீமான். ‘தம்பி’ படத்தில் உபயோகிக்கப்பட்ட எந்த வார்த்தைக்காக மன்னிப்பு கேட்டாரோ அதே வார்த்தையை மீண்டும் இன்று அவரே பேசியுள்ளார். வாய்க்கு வந்ததை பேசிவிட்டு செல்கிறார். அவரின் பேச்சுக்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதி, மதத்தின் பெயரால் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சீமான் முயற்சிக்கிறார். மதம், சாதியின் பெயரால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் சீமான் பேசி வருகிறார். சீமான் தனது மனநிலையை சோதிப்பது நல்லது. தனிப்பட்ட முறையில் உண்மைக்கு புறம்பாக பேசுவது ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு இந்த அளவுக்கு முன்னேறியுள்ளதற்கு காரணம் கலைஞர்தான். தமிழ்ச் சமூகத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவறான பாதையில் வழிநடத்துகிறார். பெண் காவலர்களை சவுக்கு சங்கர் தவறாகப் பேசி வீடியோ வெளியிட்டதை சீமான் ஏற்கிறாரா? இலங்கையில் பணம் பெற்றுக்கொண்டு இங்கு வந்து அரசியல் செய்பவர் தான் சீமான். சீமான் நாவடக்கத்துடன் பேச வேண்டும். அரசியல் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
The post சீமான் தலைவராக இருக்க தகுதியில்லாதவர்.. சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேச்சு உள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!! appeared first on Dinakaran.