- ஆற்காடு சுரேஷ் தம்பி
- ஆம்ஸ்ட்ராங்
- எக்மோர் நீதிமன்றம்
- சென்னை
- தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி
- பகுஜன் சமாஜ் கட்சி
- ஜனாதிபதி
- தின மலர்
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இறந்துபோன பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் தான் இருக்கிறார் என கருதியே அவரைப் பழித் தீர்த்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த படுகொலையின் பின்னணியில் வேறு சில கும்பல் இருக்கலாம் என்றும் பொருளாதார ரீதியில் அந்த கும்பல் கொலையாளிகளுக்கு உதவியிருக்கலாம் என்றும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள்.
மேலும், இந்த கொலை தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில், விசாரணையை துரிதப்படுத்தியுள்ள செம்பியம் போலீசார் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு எழும்பூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் தயாளன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, 11 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக நீதிமன்ற வளாகத்திலேயே போராட்டத்தை வழக்கறிஞர்கள் நடத்தியதால் குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு கூட்டி வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என கருதி குற்றவாளிகள் பூந்தமல்லி சிறையில் இருந்தவாறு காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆற்காடு சுரேஷ் தம்பி உள்பட 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்: எழும்பூர் நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.