×

எடப்பாடி 2வது நாளாக ஆலோசனை கட்சியை ஒருங்கிணைக்க தவறியதால்தான் தோல்வி: தலைமை மீது அதிமுக நிர்வாகிகள் சரமாரி புகார்

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்தது ஏன் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி நேற்று 2வது நாளாக ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய நிர்வாகிகள், வலுவான கூட்டணி அமைக்காததாலும், கட்சியை ஒருங்கிணைக்க தவறியதாலும் தோல்வி அடைந்ததாக தலைமை மீது சரமாரியாக புகார் கூறினர். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து கட்சியை வழிநடத்தினர்.

ஆனால், இரண்டு பேருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி இருந்து வருகிறார். மேலும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தல், நாடாளுமன்ற பொதுத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் என வரிசையாக 9 தேர்தல்களை அதிமுக சந்தித்தது. இந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வி அடைந்தது.

அதிமுக தொடர்ந்து படுதோல்வியை சந்தித்த நிலையில், கட்சியை ஒருங்கிணைத்து, பிரிந்து சென்ற தலைவர்களை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், எடப்பாடி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்களை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பிடிவாதமாக கூறி வருகிறார்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது ஏன் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் முன்னணி தலைவர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

முதல்நாள் கூட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது கட்சி நிர்வாகிகள் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. இவர்களுடன் யாரும் தொடர்பு வைத்திருந்தால் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள்” என்று எச்சரித்தார்.

இதை தொடர்ந்து, நேற்று 2வது நாளாக காலை 9 மணிக்கு சிவகங்கை, வேலூர் தொகுதி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், தமிழகத்தில் அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலின்போது ஏற்படுத்திய (அதிமுக – தேமுதிக) கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

வலுவான கூட்டணி அமைக்காததால்தான் அனைத்து இடங்களிலும் தோல்வி ஏற்பட்டது. அதேபோன்று திமுக அரசு கொண்டு வந்துள்ள மகளிருக்கான இலவச பேருந்து பயணம், மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித்திட்டம், கல்லூரி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற புதிய திட்டங்களை அதிமுக ஆட்சியில் செயல்படுத்த தவறி விட்டோம். கட்சி நிர்வாகிகளும் வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

கட்சியை ஒன்றிணைக்க தவறியது உள்ளிட்ட காரணங்களால்தான் தோல்வி அடைந்தோம்” என்று கட்சி தலைமை மீதே சரமாரியாக புகார்கள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி, ‘‘2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி ஏற்பட முயற்சி செய்வோம். அதேநேரம், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க முடியாது என்றார்.

The post எடப்பாடி 2வது நாளாக ஆலோசனை கட்சியை ஒருங்கிணைக்க தவறியதால்தான் தோல்வி: தலைமை மீது அதிமுக நிர்வாகிகள் சரமாரி புகார் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,AIADMK ,Chennai ,Edappadi Palaniswami ,ADMK ,Tamil Nadu ,
× RELATED காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க...