×

அண்ணா பல்கலை பதிவாளருக்கு பிடிவாரன்ட்

சென்னை: சென்னையை சேர்ந்த தேவதாஸ் மனோகரன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய போது, உதவி பேராசிரியர் நியமனம் உள்ளிட்டவற்றில் முறைகேடு செய்ததாக கூறி அவருக்கு கடந்த 2018 பிப்ரவரி மாதம் மெமோ வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மெமோவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தேவதாஸ் மனோகரனுக்கான ஓய்வூதிய பலன்களை 8 வாரங்களில் வழங்க வேண்டும் என்று 2023 ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை என்று தேவதாஸ் மனோகரன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பதிவாளர் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதிகள், பதிவாளர் ஜே.பிரகாஷுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது என உத்தரவிட்டு விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post அண்ணா பல்கலை பதிவாளருக்கு பிடிவாரன்ட் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Devdas Manokaran ,Trichy Anna University ,
× RELATED சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு...