×

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீது 18ல் விசாரணை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 66 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு, தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீதரன், பா.ஜ. வழக்கறிஞர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் கே.பாலு ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதிலளித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெற்று வரும் நிலையில் சிபிஐக்கு மாற்ற அவசியம் இல்லை. கள்ளச்சாராயத்தை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அதிமுக மற்றும் பாமக தொடர்ந்த வழக்குகளில் ஏற்கனவே பதில் மனுக்களும், அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதிய மனுக்களுக்கு பதில் அளிக்க வேண்டியுள்ளது என்றார். இதையடுத்து, அனைத்து மனுதாரர்களுக்கும் அறிக்கையும், பதில் மனுக்களும் வழங்குமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

The post கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீது 18ல் விசாரணை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBI ,Kallakurichi ,ICOURT ,Chennai ,Kalalakurichi Karunapuram ,CBCID ,Majority Prosecution Team ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு...