திருத்தணி: திருத்தணி அருகே நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட 2ம் கட்ட முகாமில் அமைச்சர் ஆர்.காந்தி பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். மக்களுடன் முதல்வர் திட்டத்தை 2ம் கட்டமாக ஊரக பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகையில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து கலெக்டர் பிரபு சங்கர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ17 மாற்றுத்திரனாளி பயனாளிகளுக்கு ரூ16.32 லட்சம் மதிப்பீட்டில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள், வருவாய் துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு சிறு விவசாயி சான்று, பட்டா மாறுதல், மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ5 பயனாளிகளுக்கு ரூ33 ஆயிரம் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள் ஆகியவற்றை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் 2ம் கட்டமாக ஊரக பகுதிகளில் இம்மாதம் 15ம் தேதி முதல் அடுத்த மாதம் 13ம் தேதி வரை ஊராட்சிகளில் 3 கட்டங்களாக 78 முகாம்கள் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நகர்புறங்களில் நடைபெற்ற முகாம்களில் 12 துறைகளின் கீழ் 43 சேவைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டன.
தற்போது கூடுதலாக மருத்துவம்- குடும்ப நலம், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை ஆகிய 3 துறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 58 சேவைகளுக்கான மனுக்கள் பெறப்பட்ட 30 நாட்களில் தீர்வு காணப்படும். மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரக பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி பயன் பெற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, கோட்டாட்சியர் தீபா, வட்டாட்சியர் மதியழகன், டிஎஸ்.பி விக்னேஷ், ஒன்றிய திமுக செயலாளர் ஆர்த்தி ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிரண், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சந்தானம், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் தாமோதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார் appeared first on Dinakaran.