×

மாமல்லபுரம் பேரூராட்சியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியில் பல லட்சம் முறைகேடு: நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை


மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியில் பல லட்சம் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதனை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வேதாசலம் நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேனுவல் மூடியில் கசிவு ஏற்பட்டு கொஞ்சம், கொஞ்சமாக கழிவுநீர் வெளியேறியது. பின்னர், பாதாள சாக்கடை மேனுவல் மூடி உடைந்து கவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து வெள்ளம்போல் ஓடியது. அப்போது, பல்வேறு வீடுகளில் கழிவுநீர் புகுந்தும், 3வது குறுக்கு தெருவில் கால் வைத்து நடக்க முடியாத அளவில் கழிவுநீர் குளம் போல் தேங்கி கடும் தூர்நாற்றம் வீசியது. அங்கு, தேங்கி நின்ற கழிவு நீரில் கொசு தொல்லை அதிகரித்து காணப்பட்டது.

இதனால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும், அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் நடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீதும், அருகில் உள்ள வீடுகள் மீதும் கழிவு நீர் தெறித்ததால் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும், அவசர உதவிக்கு வரும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் எளிதில் வந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, வேதாசலம் நகர் பிரதான சாலை, 1வது மற்றும் 2வது குறுக்கு தெருவில் சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய்களை அகற்றி விட்டு, புதிதாக கால்வாய்கள் கட்ட வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மாமல்லபுரம் பேரூராட்சியின் பொது நிதியின் கீழ் மழைநீர் வடிகால்வாய்கள் கட்டுவதற்கு ரூ24.25 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு, மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மழைநீர் வடிகால்வாய்கள் தரமில்லாமல் குறைந்த அளவு சிமென்டில் எம்சாண்ட் கலப்படம் செய்து கான்கிரீட் கலவை கொண்டும். கால்வாயின் அடிப்பகுதியில் கான்கிரீட் போடாமலும், சேதமடைந்த பழைய கால்வாய்களை அகற்றாமலும், அதன் மேலேயே கட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து, பேரூராட்சி இன்ஜினியர் மற்றும் பணி மேற்பார்வையாளரிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், பணிகளை நேரில் வந்து பார்வையிடாமலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலும் அலட்சியமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. மேலும், பேரூராட்சி பகுதியில் நடைபெறும் பல்வேறு பணிகளை அதிகாரிகளே எடுத்து செய்வதாக கூறப்படுகிறது.

இதனால், பேரூராட்சியில் நடைபெறும் அரசு பணியை ஆய்வு செய்யும் அதிகாரிகளே இந்த பணியை செய்வதால் பல முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ரூ24.25 லட்சம் மதிப்பீட்டில் வடிகால்வாய் அமைக்கும் பணியின் மூலம் பல லட்சம் முறைகேடு மற்றும் குளறுபடிகள் நடந்துள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உடனடியாக நேரில் வந்து ஆய்வு செய்து, கால்வாய் பணிகளை பார்வையிடாத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான முறையில் மழைநீர் வடி கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post மாமல்லபுரம் பேரூராட்சியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியில் பல லட்சம் முறைகேடு: நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Mamallapuram Municipal Corporation ,Vedachalam ,
× RELATED மாமல்லபுரம்-கோவளம் சாலையில்...