×

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் நிலையில் ஜூலை 3வது வாரத்தில் இளநிலை ‘நீட்’ கவுன்சிலிங்?: சென்னை ஐஐடி நடத்திய ஆய்வின் அடிப்படையில் முடிவு

புதுடெல்லி: நீட் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் நிலையில் வரும் ஜூலை 3வது வாரத்தில் இளநிலை ‘நீட்’ கவுன்சிலிங் நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. சென்னை ஐஐடி நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு நடந்த இளநிலை மருத்துவ நுழைவு தேர்வில் ‘நீட்’ வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியதில் சர்ச்சை உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து, நீட் மறு தேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு முறைகேட்டின் தீவிரத்தின் அடிப்படையில் மறுதேர்வை நடத்துவதா?, வேண்டாமா? என்று முடிவு செய்யப்படும் என முந்தைய விசாரணையின் போது உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு நேற்று தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், ‘நீட் தேர்வு முடிவுகளின் தரவுகளை வைத்து சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில், அசாதாரண சூழல் ஏதும் இல்லை என்பது தெரியவருகிறது. நிகழாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்ட தேர்வர்களின் தரவுகளின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐஐடி அறிவுறுத்தி உள்ளது. அவ்வாறு முறைகேடு ஏதேனும் கண்டறியப்பட்டால், அந்த தேர்வரின் கவுன்சிலிங் ரத்து செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

மேலும் ‘நீட்’ நுழைவுத் தேர்வை நடத்திய தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘தேசிய, மாநில, நகரம், மையங்களின் அடிப்படையில் நீட் மதிப்பெண்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அதில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் வழக்கமான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதில் யாருடைய தலையீடும் இல்லை. இதன்மூலம் நீட் தேர்வில் பெரும் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பது உறுதியாகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது. இந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்ற விசாரணை நடத்துகிறது. முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், நீட் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நீட் மறுதேர்வு நடத்த ஒன்றிய அரசு விரும்பவில்லை என்பது தெளிவாகி உள்ளது. மீண்டும் தேர்வு நடத்தினால், கடந்த மே 5ம் தேதி தேர்வெழுதிய சுமார் 24 லட்சம் மாணவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் நீட் போன்ற தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க, ஏழு பேர் கொண்ட நிபுணர் குழுவையும் ஒன்றிய அரசு அமைத்துள்ளது. அவர்கள் விரைவில் தங்களது பரிந்துரையை வழங்க உள்ளனர்.

 

The post உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் நிலையில் ஜூலை 3வது வாரத்தில் இளநிலை ‘நீட்’ கவுன்சிலிங்?: சென்னை ஐஐடி நடத்திய ஆய்வின் அடிப்படையில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,IIT Chennai ,New Delhi ,Union Government ,IIT ,Chennai ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் விவகாரம் அனைத்து...